November 22, 2024

பிரான்சில் 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

கோவிட் 19 வரையறைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உப தலைவர் திரு. பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு. கனகசபாபதி ஜெயகாந் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிச்சிக் கிளையின் பொறுப்பாளர் Mme.Michelle Capded அவர்களும் OEI மனித நேய அமைப்பின் பிரதிநிதி Mme.Gabriel Vuchaid அவர்களும் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான பிரெஞ்சு மொழியிலான விளக்கத்தை கொலம்பஸ் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் திரு.மகேஸ்வரன் நிதீபன், கிளிச்சி இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வன் அனுஷன் இந்திரநாதன், செல்வன் ஹரிஸ் கண்ணதாசன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
குறித்த 17 பணியாளர்களின் படுகொலை தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது.
Mme.Michelle Capded, Mme.Gabriel Vuchaid ஆகியோர் தெரிவிக்கையில், தாம் தொடர்ச்சியாக இந்நிகழ்வில் கலந்து கொள்வதாகவும், குறித்த பணியாளர்களின் மனிதநேய செயற்பாடுகள் தொடர்பில் தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்த அதேவேளை, தாமும் இவ்வாறான பணிகளைச் செய்வதால், இந்நிகழ்வில் கலந்து கொள்வது தமது கடமை எனவும் தெரிவித்தனர்.
பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு. கனகசபாபதி ஜெயகாந் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு முறையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்போது, ஒரு தயக்கத்துடனேயே வருவேன். ஆனால் இம்முறை ஒரு பதிலோடு வந்திருக்கிறேன்.
அதாவது குறித்த பணியாளர்களின் படுகொலை தொடர்பான வழக்கு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. 3 அமர்வுகள் சென்றுள்ளன. விரைவில் நல்ல ஒரு தீர்வு கிட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார்.
இந்த கோவிட் 19 இடருக்கு மத்தியில் இந்த நினைவேந்தலை நிகழ்த்த ஒத்துழைத்த அனைவருக்கும் கிளிச்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்ததுடன், குறித்த பணியாளர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.