பின்கதவு பேச்சுக்களில் கூட்டமைப்பு மற்றும் மகிந்த அணி! ஆங்கில ஊடகம்!!
தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் பின்கதவு வழியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் தமக்கு தெரிவித்ததாக ‘எக்கோனோமி நெக்ஸ்‘ (EconomyNext) என்ற பிரபலமான கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்த முற்பட்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் இந்த செய்தியை எழுதிய அர்ஜுனா ரணவன என்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தலின் பின்னர் தமிழ் அரசியலில் பெரும் மாற்றம் ஒன்று இடம்பெறும் என்றும் தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டணி அமைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் வட மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்மொழியப்பட்டிருப்பவருமான கலாநிதி சுரேன் ராகவன் ‘எக்கோனோமி நெக்ஸ்’ க்கு தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றி பெறவைக்கும் நோக்கத்தில் பொதுஜன பெரமுன அரசாங்கம் செயற்படுவதாகவும், தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்தல் பிரசாரங்களின்போது தெரிவித்துவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்த்தர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கெகலிய ரம்புக்வல , தினேஷ் குணவர்தன போன்றவர்கள் கூட்டமைப்பு வெற்றிபெறும் வகையில் செயற்பட்டுவருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதேவேளை, திருகோணமலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ரூபன் என்று அழைக்கபப்டும் ரவீந்திரா ஆத்மலிங்கம் சம்பந்தனை தோற்கடித்து வெற்றிபெருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், சம்பந்தனை வெற்றிபெற செய்யும் நோக்கத்தில் பொதுஜன பெரமுன சம்பந்தனுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.
பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே , தனக்கு வாக்களிக்க விரும்பாதுவிட்டால், சம்பந்தனுக்கு வாக்களிக்கும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம், திருகோணமலையில் இம்முறை இரண்டு தமிழ் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பு தோன்றியுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ரூபன் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும், சம்பந்தன் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது.