யாழ்.தளபதி மாற்றம்: குண்டுவெடிப்பு பின்னணியா?
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் தொடர்ச்சியாக மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 8ஆம் திகதியே இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு இடமாறிச் செல்லும் வணீகசூரிய தொண்டர் படையணியின் தளபதியாக செல்லும் அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார்.
தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களுக்குள் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அமைவாக, இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் வல்லிபுரம் மற்றும் வல்லை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் இவ்விடமாற்றம் நடப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய வெடிப்பை இராணுவ புலனாய்வு கட்டமைப்பே செய்தமை அம்பலமானதையடுத்து இடமாற்றம் நடந்துள்ளது.