சிறிதரனின் விருப்பு வாக்கு ஆசை: கூட்டமைப்பின் இறுதி பிரச்சார மேடையில் வெடித்தது மோதல்! முக்கிய தகவல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சார கூட்டத்தில், சி.சிறிதரன் அநாகரிகமாக பேசிய பேச்சினால் பெரும் சர்ச்சையேற்பட்டது. மேடையில் வைத்தே அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் கஜதீபன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப்பிரச்சார கூட்டம் இன்று நல்லூர் கிட்டு பூங்காவில் நடந்தது.
இதன்போது உரையாற்றிய சிறிதரன், த.சித்தார்த்தனை குறிவைத்து தாக்கினார். விருப்பு வாக்கில் தனக்கு சவாலாக அவர் இருப்பார் என கருதி, அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. இதன் பின்னர் பேசிய கஜதீபன்,
இந்தமேடையில் சில சில்லறைத்தனமான கருத்துக்கள் வந்தன. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இது கற்றறிந்தவர்கள் இருக்கும் அவை. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கவனமாக பேச வேண்டும். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது சபை நாகரிகமாக இருக்காது.
ஒன்றுபட்ட தரப்பாக இருந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க கோரும்போது, மிக கவனமாக நாங்கள் பேச வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி உள்ளது. புளொட் உள்ளது. ரெலோ உள்ளது. முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்றைக்கு இல்லாவிட்டால் கூட, ஈ.பி.ஆர்.எல்.எவ் மூலம் அரசியலுக்கு வந்து, பின்னர் தமிழ் அரசு கட்சியில் இணைந்த சிறிதரன் இருக்கிறார்.
எல்லோரும் பொதுவாக இருக்கின்ற சபையில் என்ன விடயத்தை பற்றி பேச வேண்டுமென்பதில் எமக்குள் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இப்படி சிலர் பேசுகிறார்கள் என்பதற்காக மக்கள் யாரும் குழப்பமடைய தேவையில்லை. எங்களிடம் என்ன இருக்கிறதோ, அந்த அறிவு மட்டத்தின் அடிப்படையிலேயே விடயங்கள் வெளிவரும் என பதிலடி கொடுத்தார்.