முன்னணியுடன் பிரச்சினையில்லை: பத்மினி
தமிழ் மக்களின் அரசியலை தேர்தல் அரசியலாக குறுக்குவதை விடுத்து மக்கள் அரசியலாக முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிக மோசமான தேர்தல் ஒன்று இன்று தமிழர் மீது திணிக்கப்படுகின்றது. இது தமிழ் மக்களை இன்னும் இன்னும் சிறுமைப்படுத்தி இனத்தை சீரழிக்கும் முயற்சி. இதனை நான் வெறுக்கின்றேன். இதனால் நான் இத்தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளேன். எனினும் தமிழ் மக்களின் விடுதலை அரசியலை மக்கள் மயப்பட்ட வகையில் மீட்டெடுக்கும் முயற்சியில் நான் முன்செல்வேன்.
இன்று நான் தேர்தலில் பங்கெடுக்காததை வைத்துக் கொண்டு த.தே.மக்கள் முன்னணிக்கும் எனக்கும் பிரச்சினை இருப்பதாக ஒரு கதை நிலவி வருகின்றது. ஆனால் அது உண்மையல்ல.
இன்று தேர்தல் என்பது வெறும் பதவி பிடிப்பிற்கான மிகக் கீழ்த்தரமான போட்டியாக மாறியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலை அரசியல் இத்தகைய குறுகிய நோக்குடைய தேர்தல் அரசியலாக குறுகியுள்ளதை நான் வெறுக்கின்றேன். இன்று இத் தேர்தல் அரசியல் மக்களை சாதிரீதியாக மதரீதியாக, பிரதேசரீதியாக கூறுபோட்டு மக்களின் ஒற்றுமையை குலைக்கின்றது. மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை ஏமாற்றி அரசியலை கீழ்தரமாக்குகின்றனர். மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்க முயல்கின்றனர்.
இதிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். தமிழ் மக்கள் நாம் ஒரு பாரம்பரியம் மிக்கதேசிய இனம். தொன்மை வாய்ந்த மிக வலிமையான இனம் எனும் உணர்வுகள் ஊடாக மக்களை பலப்படுத்த வேண்டும். மக்களை ஒற்றுமையுடைய ஒரு பெருந்திரளாக உருவெடுக்க வைப்பதன் மூலமே முழு மக்களின் விடுதலையை நாம் அடைய முடியும்.
அத்தகைய வேலைக்கு பண்பாட்டு வேலை மிகவும் அடித்தளமானது என நான் உறுதியாக நம்புகின்றேன்;. சிறுகச் சிறுக ஆரம்பித்து அதனை விருட்சமாக மாற்றும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன்.
அத்தகைய வளர்ச்சி அடைந்த மக்கள்அரசியலின் ஒரு அங்கமாக தேர்தல் அமைவதை நான் நிராகரிக்கவில்லை. அதுவரையில் இத்தேர்தல் மக்களை கூறுபோடுவதற்கே உதவும்.
2009 இன அழிப்பின் பின் சம்பந்தர் த.தே.கூட்டமைப்பை உருக்குலைத்தார். அன்று த.தே.கூட்டமைப்பு என்பது கட்சிகளும், மக்கள்அமைப்புக்களும் இணைந்ததொன்றாகவே இருந்தது.
அன்று இருந்த இன அழிப்புச் சூழலில் எங்களிடம் எதுவுமே சொல்லாமல் சம்பந்தர் கும்பல் தமிழ் தேசிய கூட்டமைப்பை தாமே சூறையாடிக் கொண்டார்கள். கொள்கையை கைவிட்டார்கள். அந்தநிலையில் நானும் கஜேந்திரகுமார் ,மற்றும்; கஜேந்திரன் ஆகியோரும் கொள்கைக்காக நின்றோம். கொள்கையில் உறுதியும், யாருக்கும் விலைபோகாத தன்மையும் கொண்ட கஜன், கஜேந்திரகுமாரை நான் மதிக்கின்றேன்.
தமிழ் மக்களின் விடுதலை அரசியலை முன்னெடுக்கும் மக்கள் இயக்கத்தை கட்டியமைப்போம் என அறைகூவல் விடுக்கின்றேன்.