கூட்டமைப்புக்கு பெரும் பின்னடைவு: வருகிறார் சாம்?
வடக்கில் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவேண்டியிருக்குமென்ற கருத்து கணிப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் கூட்டத்தில் பங்குகொள்ளும் நோக்கில் எதிர் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
ஒருபுறம் திருமலையில் அவரது நிலை தள்ளாடும் நிலையில் அவருக்கு ஆதரவு தேடி இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பங்குகொள்கின்றனர்.
இதேநேரம் நாளைய தினம் மட்டக்களப்பில் இடம்பெறும் கூட்டங்களில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பங்குகொள்ளும் அதே நேரம் முதலாம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இடம்பெறும் இரு கூட்டங்களில் கலந்துகொண்டு இரா.சம்பந்தன் உரையாற்றவுள்ளார்.
இதனிடையே 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இதேநேரம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் விதிமுறை மீறல்களின் பதிவுகளும் அதிகரிக்கும் நிலையில் இதுவரை 310 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகப்படியானவை யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திலேயே கானப்படுகின்றது. இங்கே 110 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதோடு வவுனியா மாவட்டத்தில் 71 முறைப்பாடுகளும் ,மன்னார் மாவட்டத்தில் 38 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 35 முறைப்பாடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 56 முறைப்பாடுகளுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 145 முறைப்பாடுகளும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 165 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.