குருபரனின் வெளியேற்றமும் இனஅழிப்பின் அங்கமே!
கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை இன அழிப்பு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னரும் கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நிலப்பறிப்பு, தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, காலாச்சார அழிப்பு என இவை தொடர்கின்றன. இன்று இது மாணவர்களின் கல்வியில் கைவைக்கும் இன அழிப்பாக மாறியுள்ளிதாக சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழக சட்ட பீடத் தலைவர் கலாநிதி குருபரன் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியுள்ளார் என்பதை விட வெளியேற்றப்பட்டார் என்றே கூறவேண்டும். விரிவுரையாளர் பணியோடு சட்டவாளர் பணியையும் மேற்கொள்வதற்கு முன்னர் அனுமதியளித்த யாழ் பல்கலைக்கழக மூதவை இராணுவ அழுத்தங்களினால் அனுமதியை இரத்துச் செய்தமையே வெளியேறியமைக்கான காரணமாகும்.
நாவற்குழியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போன இளைஞர்களின் வழக்கினை குருபரன் பொறுப்பேற்று நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதனாலேயே இத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறையிட்டதன் பேரில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குகுழு தடைவிதிக்குமாறு கோரியதனாலேயே பல்கலைக்கழக மூதவை தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் வெளி அழுத்தங்களுக்குப் பணிந்து போகாமல் சுயாதீனமாக செயற்படக்கூடியவை, யாழ் பல்கலைக்கழக மூதவை அந்த சுயாதீனத் தன்மையை உதாசீனம் செய்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு பணிந்துபோயுள்ளது. இது பல்கலைக்கழகங்களின் சுயாதீனத்தை இல்லாமல் செய்வதோடு விரிவுரையாளர்களின் சுயாதீனத் தன்மையையும் இல்லாமல் செய்துள்ளது.
கலாநிதி குருபரன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற புலமையாளன.; உலக புகழ்பெற்ற லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டத்தையும் லண்டனில் இன்னோர் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்தையும் பூர்த்தி செய்தவர். மிகச் சிறு வயதிலேயே பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் தலைவர் பதவிக்கு உயர்ந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் அதி உச்ச ஆற்றலைக் கொண்டவர். சட்டத்துறையில் மட்டுமல்ல சர்வதேச அரசியல,; பொருளாதாரம், கலாச்சாரம், இலக்கியம் என பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமூக விஞ்ஞானத் துறைகள் அனைத்தையும் இணைத்து சட்டத்தைக் கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர். தமிழ்ச் சமூகத்தில் சிவத்தம்பி கைலாசபதி போன்ற பல்துறை ஆளுமையுடையவர்களின் வரிசையில் ஒருவராகப் போற்றப்படக் கூடியவர்.
இத்தகைய ஆற்றல் வாய்ந்த புலமையாளனின் அறிவு நமது மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பதும் ஒரு இன அழிப்பேயாகும். கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை இன அழிப்பு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னரும் கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நிலப்பறிப்பு, தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, காலாச்சார அழிப்பு என இவை தொடர்கின்றன. இன்று இது மாணவர்களின் கல்வியில் கைவைக்கும் இன அழிப்பாக மாறியுள்ளது.
மருத்துவக்கல்வியும், சட்டக்கல்வியும் அதிகளவு செயல்முறை அனுபவங்களுடன் தொடர்புடையவை. இவ் அனுபவங்கள் இல்லாமல் இத்துறைகளில் முழுமையான மாணவர்களை உருவாக்க முடியாது. பல நாடுகளில் சட்டப் புலமையாளர்கள் கல்விப்பணியையும் சட்டதொழில்ப் பணியையும் ஒருங்கேயாற்றுகின்றனர். இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பலர் மாணவர்களுக்கு செயன்முறை அனுபவத்தை வழங்கவேண்டும் என்பதற்காக சட்டவிரிவுரையாளர்கள் சட்டத்தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே சட்ட விரிவுரையாளர் ஒருவர் சட்டத்தொழிலையாற்றுவது அனுமதிக்கக்கூடியது மட்டுமல்ல அசியமானதும்கூட.
கலாநிதி குருபரன் சிறந்த சட்ட விரிவுரையாளர் மட்டுமல்ல சிறந்த மனிதவுரிமை சட்டவாளருமாவர். பல மனிதவுரிமைவழக்குகளில் இலங்கை நீதித்துறையின் முதுகெலும்பையே பரிசோதனை செய்தவர். நாவற்குழி இளைஞர்கள் பற்றிய வழக்கும் இத்தகைய தொன்றே! சுன்னாகம் மின்சார நிலைய கழிவு ஓயில் வழக்கிலும் திறமையாக வாதாடி மக்களுக்கு வெற்றியைப் பெற்றக் கொடுத்தவர். இந்தவகையில் அவரது சேவை தமிழ் மக்களுக்கும் தேவையானதாகும்.
கல்விப்பணி, சட்டத்தொழில் என்பவற்றிற்கு அப்பால் அடையாளம் என்ற கொள்கை ஆய்வு நிலையத்தையும் உருவாக்கி அதன் இயக்குனராக செயற்பட்டு தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார விடயங்கள் தொடர்பாக ஆய்வுப் பணிகளையும் செய்து வருகின்றார். மாணவர்களுக்கு ஆய்வு தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.
இதற்கப்பால் கலாநிதி குருபரன் ஒரு வலுவான தமிழ்த்தேசியவாதியாவார். அவர் நெருக்கடிகளை சந்திப்பதற்கு இதுவும் ஒரு காரணம். துமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை புலமைரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் வெளிக்கொண்டுவருபவர். தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேசமயப்படுத்தியதில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் உருவாக்கத்திலும், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திலும் அளப்பரிய பங்கினையாற்றியவர் தற்போதும் தமிழ் சிவில் சமூகச் செயற்பாடுகளில் பங்காற்றி வருகின்றார்.
கலாநிதி குருபரன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற புலமையாளன் என்பதால் இலங்கையில் தான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. சர்வதேச ரீதியாக புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தங்களது கல்விக் கூடங்களில் இணைப்பதற்கு தயாராக இருக்கின்றன. ஆனாலும் தமிழ்மக்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தாயகத்தில் அவர் தங்கியிருக்கின்றார். இத்தகைய சிறந்த கல்வியாளனை தமிழ் மக்கள் இழக்க முடியாது.
எனவே கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக கல்விப்பணியையும், சட்டத் தொழிலையும் ஆற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மூதவையினை விநயமாக வேண்டிக்கொள்கின்றோம்.
அன்பான தமிழ் மக்களே! கல்வி தமிழ் மக்களின் மிகப் பெரும் சொத்து எனவே கலாநிதி குருபரன் விவகாரத்தில் ஒரு தேசமாக அணிதிரளுமாறு தாழ்மையாக வேண்டுகின்றோம்