மறவன்புலோ சுவரொட்டி: சயந்தன் படையணி தாக்குதலாம்?
தீவிர இந்து மத செயற்பாட்டாளரும் ஈழம் சிவசேனை தலைவருமான மறவன்புலோ சச்சிதானந்தன் ஆலயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் சுவரொட்டியை ஒட்டியது சயந்தன் படையணி என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சுமந்திரனிடம் 100 கோடி ரூபாய் நட்ட ஈடு கோருவதாக மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்துள்ளார்.
அவர் பரம்பரை அறங்காவலராக உள்ள வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலில் திட்டமிட்டு சுமந்திரனின் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது பற்றி அவர் தெரிவிக்கையில் சைவ சமயத்தையும் சைவத் திருக்கோயில்களையும் இழித்துப் பழிக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் திரு சுமந்திரனிடம் 100 கோடி ரூபாய் நட்ட ஈடு கோர உள்ளேன்.
கடந்த சனிக்கிழமை மாலை நான் திருக்கோயிலுக்கு வழிபடப் போகும்போது திருப்பணி செய்து கொண்டிருக்கிற கருவறையைச் சுற்றி வெள்ளையடித்த
இடம் மிக அழகாக இருந்தது. பார்த்து மகிழ்ந்து போனேன்.
நேற்று ஞாயிறு காலை கோயிலுக்கு வழிபாட்டுக்காக போகும்போது திருப்பணி செய்கின்ற கருவறைச் சுவர்களில் நான்கு சுவரொட்டிகளைக் கண்டேன். அத்தகைய சுவரொட்டிகள் நிலதாரி அலுவலகச் சுவரிலும் எதிரே உள்ள கடையின் பலகை ஒன்றிலும் இருந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சுமந்திரனுக்கு வாக்களிக்குமாறு அவருடைய படமும் அவருடைய சின்னமும் அவருடைய எண்ணும் எங்கே புள்ளடி என்ற குறியீடும் மட்டுமே சுவரொட்டியில் இருப்பதைக் கண்டேன்.
அழுதேன். விக்கினேன். வெம்பினேன். பெருமானே உன் அடியவன் உனக்கு நெஞ்சாரத் திருப்பணி செய்பவன். உன்னை ஒழிய வேறொருவரையும் நம்பாதவன். எனக்கு ஏன் இந்தச் சோதனை.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக என் முன்னோர் தமக்கென அமைத்து வழிபட்டு வந்த கோயில் அல்லவா? நாகர் காலத்து நாகதம்பிரான் கோயில் அல்லவா? அந்த வளவிற்கே நாகதம்பிரான் வளவு என்றுதானே பெயர்.
தமிழரான நாகர் மரபில் வந்தவன் நான் அல்லவா? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? எனப் பெருமானிடம் மன்றாடினேன்.
சைவக் கோயில்களை இடித்துச் செபக் கூடங்கள் கட்டுகின்ற திருச்சபைகளின் பொறுப்புகளில் இருந்தவர் சுமந்திரன்.
சுவரொட்டி ஒட்டுவதற்குப் பல இடங்களிருந்தும் கருவறையைச் சுற்றி ஏன் சுவரொட்டிளை ஒட்டினார்?
தனது சகாக்களுக்கு இந்தக் கோயிலை இடிக்க அடையாளம் காட்டுகிறாரா?
பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நாகதம்பிரானை நீக்கிவிட்டுச் சிலுவை வழிபாட்டிற்கு விடப் போகிறாரா? என்றெல்லாம் என் மனம் பேதலித்து. நாக்குப் புலம்பியது.
சைவக் கோயில்களை இடிப்பதும் சைவக் கோயில்களைச் சாத்தான் கோயில்கள் எனக் கூறுவதும் சைவரைக் கிறித்தவராக மதம் மாற்றுவதும் அவருக்கு தொழிலாக இருந்த காலங்கள் உண்டு. அவருடைய மனைவிக்கு இப்பொழுதும் அதுவே முழுநேரத் தொழில்.
கோயில் கருவறையைச் சுற்றி அவருடைய சுவரொட்டிகளை ஒட்டுவித்தார். அவருடைய உள்நோக்கம் எனக்குப் புரிந்தது
காவல்நிலையத்தில் முறையிட்டேன். தேர்தல் விதிகளை மீறினார். சமய வழிபாட்டு இடங்களை அவமதித்தார். பழித்தார் இழித்தார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுங்கள் எனச் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறையிட்டேன் .
அவருக்குச் சட்ட நடவடிக்கைக் கடிதம் எழுத உள்ளேன்.
எனக்கு ஏற்பட்ட மன வலி.
என் நம்பிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு.
அவர் சுவரொட்டி ஒட்டியதால் கோயிலுக்கு ஏற்பட்ட இழப்பு.
அங்கு வழிபடுபவர்கள் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு. அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் முயற்சி.
இவற்றையெல்லாம் அவர் திட்டமிட்டுச் செய்கிறார் எனச் சுட்டிக்காட்டி, இழப்பீடாக 100 கோடி ரூபாய் எனக்கு தருமாறு அவரிடம் கோர உள்ளேன்.
சைவ சமயத்தையும் சைவக் கோயில்களை இழிக்கும் நோக்குடன் தேர்தல் காலத்திலும் பணிபுரியும் திரு சுமந்திரனுக்குச் சைவ உலகம் வாக்களித்தால்
தங்கள் தலையிலேயே தாங்கள் கொள்ளி வைத்தவர் ஆவார்கள் .
எனவே சைவ வாக்காளர் திரு சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.