பேராபத்தில் இருந்து தடுத்து நிறுத்திய சீமானின் நாம் தமிழர் கட்சி! சத்தமில்லாமல் சாதித்தற்கு குவியும் பாரட்டு
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தை சட்ட போராட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில செயலாளர் வெண்ணிலா தாயுமானவன், தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போது தான், வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமானது நாட்டின் மிகப் பழமையான நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து, 190-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை சார்ந்த, ஏறத்தாழ 40000 பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும், உணவு தேவைக்காகவும் தட்பவெப்ப சூழலுக்காவும் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன.
பரப்பளவை பொறுத்தவரை சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் பறவையினங்களை பார்வையிட இங்கு வருகை தரும் மக்கள் அதிகம் என்பதால் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் தனியார் மருந்து நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாய் செய்திகள் வந்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டார்.
அந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தினார். சூழலியல் ஆர்வலர்களின் எதிர்ப்பையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையில் உள்ள சன் பார்மாசூட்டிக்கல் ( sun pharmaceutical) என்ற தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம், உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு தனது தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றதாக செய்திகள் வெளியாகின.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் மையத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் எல்லைக்குள் இருக்கும் குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்திலிருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகளானது நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தி, சுற்றுச்சூழலைப் பாதிக்க கூடிய கடுமையான ஆற்றலுடையது.
இதனால் வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் மிகப்பெரிய ஆபத்து விளையக் கூடும் என்று அச்சப்பட்ட, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, தனியார் மருந்து உற்பத்தி நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு மீதான விசாரணை தான் நேற்று, 24-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் கடந்த மாதம் மருந்து நிறுவன விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தோம் என்ற போதிலும் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விரிவாக்கத்திற்கு அனுமதி மறுத்துவிட்டதாகவும் இதனால் மருந்து நிறுவன விரிவாக்கம் நடைபெறாது எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
மருத்து உற்பத்தி நிறுவன விரிவாக்கம் நடைபெறாது என தமிழக அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவுக்கு எதிராக மத்திய அரசிடம் மனு செய்து தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்து நீங்கியதோடு மட்டுமல்லாமல் தற்போதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற தெளிவும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் மேம்பாடு என்ற பெயரில் சரணாலய எல்லையைக் குறைப்பதற்கான தமிழக அரசின் முயற்சியை முறியடிக்க நாம் தமிழர் கட்சி தொடர்ந்து அறவழியில் போராடும், தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி மீண்டும் நீதிமன்றத்தை நாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நிலத்தினை, அதன் வளத்தினை பாதிக்கும் எவ்வித தாக்குதலையும் தடுத்த நிறுத்த மக்கள் துணையோடு நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியாக போராடும்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தொடர்ந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் மூலம் கிடைத்த இந்த வெற்றியானது அதில் முக்கியமான மற்றுமொரு மைல்கல் ஆகும் என்று நாம் தமிழர் கட்சியின் செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இந்த சட்டப் போராட்டத்தினால், வேடந்தாங்கல் விவகாரம் இப்போது, தமிழகம் முழுக்க கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.
இதனால், எதிர்காலத்தில், வேடந்தாங்கல் அருகே வேறு எந்த ஆலைகளும் அமைவதற்கான அனுமதியை அரசு வழங்காது என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் இந்த முயற்சிக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.