November 22, 2024

சம்பந்தன் மிரட்ட முடியாது-சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது- கோட்டாபய அரசு அறிவிப்பு

 

இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிரான விமர்சனங்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளுந்தரப்பினரும், கடும்போக்குவாத பௌத்த தேரர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் உடனுக்குடன் பதிலடிகளை வழங்கி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் சம்பந்தன், ‘சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்பே இதற்கு ஆதாரமாக உள்ளது.

தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேசப் பலத்துடன் தமிழர்கள் இருக்கின்றார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

சம்பந்தனின் இந்தக் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு சம்பந்தன் எம்மை மிரட்ட முடியாது. இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச

நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. எனவே, சம்பந்தன் விரும்பினால் அரசுடன் பேசலாம்.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்துக்காகவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை எமது புதிய ஆட்சியில் பேச்சுக்கு அழைப்போம். அந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சர்வதேசத்தை அவர்கள் நம்பினால் எந்தவித நன்மையையும் அவர்களுக்கும் கிடைக்காது; தமிழ் மக்களுக்கும் கிடைக்காது” – என்றார்.