November 22, 2024

பனங்காட்டான் எழுதிய “பேசுவது உங்கள் வாய் கேட்பது மற்றவர் காது“

தேர்தல் காலத்தில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டாலும், மாலைமரியாதை மேளதாள வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளின் வாய்வீச்சுக்கும், பகிரங்க சவாலுக்கும், அறிக்கைப் போருக்கும் குறைவில்லை. அடுத்த மாதத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கவுள்ள வெற்றி எண்ணிக்கையை ஒவ்வொரு கட்சிக்காரரும் கூறுவதைப் பார்த்தால், ஐநூறுக்கும் அதிகமானவர்கள் வெற்றி பெற்று எம்.பி.யாவார்கள் போலத்தெரிகிறது. இதற்கான தீர்ப்பை ஒரு நாள் நீதிபதிகள் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி ஒரு புள்ளடி வாயிலாக வழங்குவர்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கிடையிலான மோதலும், கட்சிகளின் அட்டகாசமும் சுனாமியைவிட வேகம் கொண்டுள்ளது.
தமிழர் தலைமைத்துவக் கட்சிகளுக்கும் சிங்களவர் தலைமைக் கட்சிகளுக்குமிடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை இல்லையாயினும் வாக்குறுதிகள், பொய்யுரைகள், வாய் வீச்சுகள், சவால்கள் விடயத்தில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.
இம்முறை பெருங்கூட்டங்களுக்கும் மாலைமரியாதை, மேளவாத்திய ஊர்வலங்களுக்கும் பொன்னாடை மலர்க் கிரீடங்களுக்கும் கொரோனா தடை விதித்து விட்டதால் பொதுசனங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
தமிழர் தாயகத்தில் யார் யாருக்கு எத்தனை ஆசனங்கள் என்பதில் தமிழ்த் தேசியம் என்ற பெயரிலான மூன்று கட்சிகளும் தனித்தனிக் கணக்கு சொல்கின்றன. தேர்தல் என்றால் அப்படித்தான் சொல்ல வேண்டும். தங்களுக்கு மஜோரிட்டி ஆசனங்கள் கிடையாது என்று சொன்னால் யார்தான் அவர்களுக்கு வாக்களிப்பார்கள்?
இந்த கணக்கு விடும் காட்சியை இப்போது தொலைக்காட்சிகளில் வேட்பாளர்க;டாக பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. அச்சு ஊடகங்கள் ஒருபுறத்தே பக்கம் பக்கமாக வர்ண வடிவில் விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றன. தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் மோதும் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றாக இருத்தி கேள்விகள் கேட்டு சுடச்சுட ஒளிபரப்புகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஒரேயொரு தடவை மட்டும் 22 இடங்களை வென்றது. 2004ம் ஆண்டுத் தேர்தலில் வடக்கில் 13 இடங்களிலும் கிழக்கில் ஏழு இடங்களிலும் தேசியப் பட்டியலில் இரண்டுமாக 22ஐப் பெற்ற அந்தக் காலம் ஒரு பொற்காலம்.
அந்தத் தேர்தலில் தாம் எழுபத்தைந்து வாக்குகளைப் போட்டதாக அப்போது ஆசிரியராகவிருந்த சிவஞானம் சிறிதரன் (2010ல் கிளிநொச்சி எம்.பி.யானவர்) தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் தெரிவித்தது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதற்கு முன்னைய தேர்தல்களில் பேய்களும் பிசாசுகளும் மோகினிகளும் வாக்களித்ததாக ஒரு தமிழ் அரசியல்வாதி பகிரங்கமாகத் தெரிவித்தது ஞாபகமிருக்கிறது. இறந்து போனவர்களின் பெயர்களில் கள்ளவாக்குப் போடப்பட்டதே இதன் அர்த்தம்.
அடுத்த மாதத் தேர்தலில் பிரதான தமிழ் தேசியம் பேசும் மூன்று கட்சிகள் எத்தனை ஆசனங்களைப் பெறப்போகின்றன? இருபது ஆசனங்களைக் கைப்பற்றுமென்று அறைகூவி வருகின்றார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.
அதன் அடிப்படையில் தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வை பதவிக்கு வரும் அரசாங்கம் நிறைவேற்றியே தீரவேண்டுமென்றும் கூறுகின்றார். இருபது வெற்றி என்பது அவரது நம்பிக்கையின் (பொங்கலுக்கு முன் தீர்வு, தீபாவளிக்கு முன் தீர்வு என்பதுபோல) அடிப்படையிலான ஆசை.
நல்லாட்சிக்கு நான்கரை வருடங்கள் நல்லாதரவு வழங்கியும் பெறமுடியாது போனதை, 2015ல் மகிந்தவைத் தோற்கடித்து, 2019ல் கோதபாயவை வீழ்த்த சஜித்துக்கு ஆதரவு வழங்கியபின் மகிந்த தரப்பு தருமென நம்பிக்கையா?
சிவஞானம் சிறிதரன் ஒரு செவ்வியில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஆறு, வன்னியில் ஐந்து, மட்டக்களப்பில் நான்கு, திருமலையில் இரண்டு, அம்பாறையில் ஒன்று என மொத்தம் பதினெட்டு வெற்றி என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி. ஈ.சரவணபவன் ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் கூட்டமைப்பே வெல்லுமென உறுதிபடக் கூறியுள்ளார்.
நீண்டகால அரசியல் கருத்தாளர் ஒருவர் கொழும்புப் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில் திருமலையில் சம்பந்தர் வெற்றிக்குப் போராடுகிறார் என்றும், அம்பாறையில் கூட்டமைப்பு தோல்வியடையுமென்றும் எழுதியுள்ளார்.
புலம்பெயர் வானொலிகளின் அரசியல் கருத்தாடல்களில் பங்கேற்கும் இன்னொரு அரசியல் நோக்கர் தமது பார்வையில் கஜேந்திரகுமாரின் முன்னணியும், விக்னேஸ்வரனின் கூட்டணியும் யாழ். மாவட்டத்தில் தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெறுமெனவும், சிலவேளை இவ்விரு அணிகளும் மூன்றைப் பெறலாமெனவும் ஆதார புள்ளிவிபரங்களோடு கூறினார்.
அப்படியானால் கூட்டமைப்பில் இங்கு தோல்வியடையப்போவது யார்? ச, சி, சே முதல் எழுத்துகளைக் கொண்ட மூவரின் பெயர்கள் கூட்டமைப்பு வட்டாரத்திலேயே அடிபடுகிறது.
வன்னியில் சிவசக்தி ஆனந்தனின் வெற்றியும் உறுதியென்று பரவலாகப் பேசப்படுகிறது. அப்படியென்றால் இருபது, பதினெட்டு, ஏழு என்பவை எண்ணிக்கையில் இடம்பெற முடியாத வெறும் புள்ளிகள்தானா?
இதற்கிடையில் பகிரங்க சவால்கள் வேறு. கஜேந்திரகுமார், சிறிகாந்தா, சுமந்திரன் ஆகியோர் ஒரு மேடையில் விவாதிக்க முன்வருவார்களா என்பது கேள்வி நிலையிலுள்ளது. ஒரே மேடையில் தோன்றி நாகரிகமாகக் கருத்துரைக்கும் பண்பு கிடைக்குமென இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்பார்ப்பது கஸ்டம்.
தாயகத்தில்தான் இந்த நிலைமை என்றில்லை. சிங்கள தேசத்தில் மகிந்தவை பகிரங்க மேடைக்கு சஜித் அழைத்துள்ளார். மலையகத்திலும் இப்படியான அழைப்புகள் கோதபாயவுக்கும் சவால்கள் விடப்படுகிறது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இதற்குள் சிக்குப்படாமலும், மகிந்த – கோதபாய சகோதரர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் நழுவி வருகிறார்.
தேர்தலின் பின்னர் சிலவேளை ரணில் அணி மகிந்தவுடன் சேர்ந்து ஓர் இணக்க அரசு அமைக்கக்கூடும். தமது பொதுஜன பெரமுனவுக்கு கட்டாயம் 139 இடங்களில் வெற்றி கிடைக்குமென மகிந்த கூறி வருகிறார்.
அப்படி நடக்குமானால், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டைப் பெற அவர்களுக்கு 151 எம்.பி.க்கள் தேவை. தமக்கு பற்றாக்குறை ஏற்படுமானால் என்ற கேள்விக்கு ரணில் மீது மகிந்த கண் வைத்துள்ளார்.
ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி தங்களுடன் இணைந்து பெரும்பான்மை அரசை அமைக்க முன்வர வேண்டுமென மகிந்த வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து விட்டார். இந்த முயற்சி சஜித் அணியை முற்றாக ஓரங்கட்ட உதவுமென அவர் எண்ணுவதைக் காட்டுகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு எனும் சம~;டியை தனிநாடு என விளக்கம் கூறும் மகிந்தவுக்கு ரணிலைவிட வேறு எவருடனும் இணைந்துபோக முடியாது. இது சாத்தியப்படவில்லையெனில் சஜித் தரப்பிலிருந்து ஆளிழுப்புச் செய்யவும் மகிந்த தயாராகவுள்ளார். பலகோடி ரூபா பணமும் பதவிகளும் கொடுத்தால் காரியம் ஆகிவிடும்.
இதற்கிடையில், மகிந்த தரப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு தாங்கள் ஆதரவு வழங்கத் தயாரென அவர்கள் கேட்காமலே கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் அறிவித்துள்ளனர்.
இதன் முன்னோட்டமாக புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற வேண்டுமானால் கூட்டமைப்புக்கு ஏகப்பிரதிநிதித்துவ வெற்றி வேண்டுமென சுமந்திரன் மக்களிடம் வேண்டியுள்ளார். அதாவது, வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தவிர மற்றைய அனைவரையும் மக்கள் தோற்கடிக்க வேண்டுமென்பது இவரது கோரிக்கை. இதனையே கிழக்கில் தேர்தல் சுற்றுலா செய்யும் சம்பந்தனும் தொடர்ந்து வேண்டி வருகிறார்.
மகிந்த அரசுக்கு துணைபோவதற்குத் தயாராக இருக்கும் கூட்டமைப்பு சில விடயங்களை ஆழமாக சிந்திக்க வேண்டும். தாங்கள் பதவிக்கு வந்தால் முதல் வேலையாக பத்தொன்பதாவது திருத்தத்தை ரத்துச் செய்யப்போவதாக ராஜபக்ச சகோதரர்கள் உலகம் முழுவதும் கேட்கும் வகையில் கூறி வருகின்றனர்.
நல்லாட்சி அரசில் பத்தொன்பதாவது திருத்தத்தைக் கொண்டு வருவதில் மும்முரமாக ஈடுபட்டு அதனை வெற்றியாக்கியது தாமே என்று பல இடங்களில் பல தடவை சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் பத்தொன்பதை ரத்துச் செய்யப்போகும் ராஜபக்சக்களின் ஆட்சி அமைய எவ்வாறு கூட்டமைப்பு ஆதரவு கொடுக்க முடியும்?
காவற்துறை ஆணையம், நீதித்துறை ஆணையம் என்பவை உருவாக்கப்பட்டு இந்தத்துறைகளின் பணிகள் நியமனங்கள் எந்த அரசியல் தலையீடுமின்றி செயற்பட பத்தொன்பதாவது திருத்தமே வழிவகுத்தது. இதனை ரத்துச் செய்து மீண்டும் பதினெட்டை அமுல் செய்ய மகிந்த தரப்பு முனையுமானால், முன்னைய காலம்போல எல்லாமே அரசியல் மயமாகி இரத்த ஆறு பெருக்கெடுத்தோட வழிகோலியதாக அமையும்.
நல்லாட்சி தொடர ரணிலுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு, பத்தொன்பதாவது திருத்த நீக்க விடயத்தில் இவர்களோடு கலந்துரையாடி அரசியல் ரீதியான ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதனை விடுத்து, அவர்களுக்கு முன்னர் அரசுடன் தாங்கள் இணைந்துவிட வேண்டுமென்று துடிப்பது தங்கள் கழுத்துக்கு தாங்களே கயிறு போடுவதானது.
இறுதியாக ஒன்று. அடுத்த அரசாங்கம் தங்களுடையது என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. சஜித் பிரேமதாச அணியும் இதனைத்தான் சொல்கிறது. இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் அணிக்கு தலா 150 ஆசனங்களை எதிர்பார்க்கின்றனர். மகிந்த தங்களுக்கு 139 என்கிறார். சம்பந்தன் தமக்கு இருபது உறுதி என்கிறார்.
அப்படியானால், அடுத்த மாதத் தேர்தலில் சுமார் ஐநூறு பேர் எம்.பி.களாக தெரிவு செய்யப்பட போகின்றனரா?
தேர்தல் காலத்தில் இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். ஆடுவார்கள் – பாடுவார்கள் – தேர்தல் முடிவின்பின் தோல்விக்கான காரணத்தைத் தேடுவார்கள். இதுதான் இவர்களுக்கான ஒரேயொரு அரசியல் தகுதி.
மக்களை ஏமாற்றியும், உசுப்பியும் எத்திப்பிழைக்கவும் தெரிந்திருக்கும் இவர்களுக்கு, ஷஒரு நாள் நீதிபதிகள்| தங்கள் புள்ளடி மூலம் மௌனமாகத் தீர்ப்பு வழங்குவார்கள்.
ஷபேசுவது உங்கள் வாய், கேட்பது மற்றவர் காது| என்பதை அந்த ஒருநாள் நீதிபதிகள் புரிய வைக்கும் நாள் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி.