சஜித் வந்தால் புதிய வீடுகள் கட்டலாம் – அவரது கையை பலப்படுத்துங்கள்
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் இந்த நாட்டிலே கௌரவமாகவும், மத நல்லிணக்கத்தோடும்,உரிமைகளோடும் வாழமுடியும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
வவுனியா எரிக்கலம் கல் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வன்னி மாவட்டத்தில் ஆறுபேர் தான் வெற்றிபெற முடியும் ஏனையவர்கள் தேர்தல் முடிந்ததும் மறைந்துவிடுவார்கள். அவர்களில் யார் மக்களுக்கு சேவையாற்றினார்கள். எதிர்காலத்தில் சேவை செய்யக்கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து செயற்படுவீர்களாக இருந்தால், உங்களுடைய நலன், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், கிராமத்தின் தேவைகள் என்பன தீர்க்கப்படும்.
இவற்றைச் சிந்தித்து எமக்கொரு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேண்டும். அதற்கான பலாபலனை இந்த பிரதேச மக்கள் அடைந்துகொள்வார்கள். சஜித் பிரேமதாசவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் தான் போட்டிஇருக்கின்றது.
ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை தெரிவுசெய்ய முடியவில்லை. ஆனால் பிரதமராக அதிகாரம் உள்ள பதவிக்கு, அவரை தெரிவுசெய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பல தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றோம். சிங்கள முஸ்லிம் தமிழ் தலைமைகள் இன்று ஒன்றுபட்டிருக்கின்றோம். எனவே அவரைப் பலப்படுத்தி வன்னி மாவட்டத்திலே ஒன்றிற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்குவதன் மூலம். அவரை வெற்றிபெறச்செய்யவேண்டும்.
அவர் பிரதமராக வரும் போது அவரால் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை முடித்துவைக்கலாம், புதிய வீடுகளை அமைக்கலாம். இந்த நாட்டிலே கௌரவமாக மத நல்லிணக்கத்தோடு, உரிமைகளோடு வாழமுடியும். இனவாதிகளின் சதித்திட்டங்களில் இருந்து விடுபடலாம். எனவே அவரது கைகளைப் பலப்படுத்துங்கள் என அவர் மேலும் குறிப்பிடடுள்ளார.