November 22, 2024

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரதேரர்!

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்குச் செல்லவேண்டுமாயின் குருணாகல் மரபுரிமை உடைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களது ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது என தாம் நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகலில் உடைக்கப்பட்டுள்ள வரலாற்று அடையாளமான புவனேகபாகு மன்னனுடைய அரசசபையை பார்வையிடுவதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஞானசார தேரர் அங்கு சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷக்களுக்களது பெருமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர்களுக்கு கீழ் உள்ளவர்களே இந்த உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிகிரியாவிற்கு சென்ற தமிழ் இளைஞரொருவர் அங்குள்ள சுவரில் கீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அதனை அண்மித்த விகாரையொன்றில் இளைஞர்கள் சிலர் முறைதவறாக ஒளிப்படம் எடுத்ததற்காக அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இருக்கையில், பெரும் வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துமும் மிக்க கட்டடம் உடைக்கப்பட்டமைக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், பலமற்ற பொதுமக்கள் மீதுதான் சட்டம் பாயுமா என்றும் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது வேலைத் திட்டத்தை இதில் காண்பிக்குமாறு கோருகின்றோம். இந்தக் கட்டம் குறித்து 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டு தேசிய சொத்துக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையே இதுவாகும் என்று ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குருணாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் ஒரு சதமும் மக்களின் வரிப்பணத்தில் இல்லாமல் இதனை தகர்த்தவர்களது சொந்தச் செலவில் கட்டம் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.