ஜனநாயக போராளிகள் இப்போது இராணுவ புலனாய்வு பிரிவல்ல?
இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றதென கண்டுபிடித்துள்ளார் துண்டு சீற்றுக்காக அலையும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
இன்று (18) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காகவும், அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவுமே தமிழர்களுக்கு எதிரான இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இராணுவ அடக்கமுறைகளுக்கு எதிராக வடக்கு கிழக்கிலே உள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களும் செயலாற்றினார்கள்.
இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து வந்திருக்கின்ற எமது தமிழ் இனம் வெறுமனே அபிவிருத்திக்கும், சலுகைகளுக்காவும் விலைபோய் விட முடியாது. தெற்கிலே விலைவாசி குறைத்தால் வாக்களிக்கப்படும். ஆனால் வடக்கு கிழக்கிலே அறிவிக்கப்படுகின்ற எந்த சலுகைகளுக்குப் பின்னாலும் தமிழர்கள் செல்ல மாட்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போராளிகள் தாங்கி நிற்பதற்கான காரணம் ஒன்றுதான். இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும்.
கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்க முடியாமலும், அவர்களைத் தேசியவாதத்தில் இருந்து பிரிக்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திமே பேரம் பேசலினூடாகப் பணம் கொடுத்து வாங்கப்பட்டார். அந்தப் பலவீனமான மனிதர் தற்போது தன்னை ஒரு பலமானவராகக் காட்டிக் கொண்டு மீண்டும் இந்தத் தேர்தல் மேடைக்கு வந்திருக்கின்றார்.
நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லுகின்றோம் அபிவிருத்திதான் தேவை, வேலைவாய்ப்பு தான் தேவை என்றால் நேரடியாக சிங்களவர்களுக்கே வாக்களித்து விடுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். காணி தந்து, வீடு தந்து அதில் என்ன செய்தாலும் அக்காணிக்கு உறுதி பெறப்படாத வரைக்கும் எப்போது வேண்டுமானலும் நீங்கள் வீதிக்கு வர நேரிடும். இது தான் உரிமை தொடர்பில் உள்ள விளக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வித்தியாதரன் சகிதம் இதே சம்பந்தனிடம் தேர்தலில் இடம் கோரி சென்ற போது உயிர் தப்பியுள்ள புலிகள் அனைவரும் இராணுவ புலனாய்வு பிரிவினர் என சம்பந்தன் எடுத்தெறிந்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.