November 22, 2024

சவேந்திரசில்வா பொய்யன்:சோசலிச சமத்துவ கட்சி!

பொதுத் தேர்தலில் இலங்கையின் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுவது குறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அதற்குப் பிரதிபலித்த இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அந்த குற்றச்சாட்டுகள் ‚பொய்யானவை‘ என்று வலியுறுத்திய போதிலும், தனது கூற்றை உறுதிப்படுத்தும் சிறு ஆதாரங்களைக் கூட அவர் வழங்கத் தவறிவிட்டார்.

தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் ‚எந்த ஆதாரமும் இல்லாமல் படையினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்‘ என்று சில்வா அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ராசேந்திரம் சுதர்சன், பரமு திருஞானசம்பந்தர், ராஜரத்தினம் ராஜவேல் ஆகிய சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்களின் வீடுகளுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியமை சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்தே, இராணுவத் தளபதியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சோ.ச.க. வேட்பாளர்களுக்கு சம்பந்தர் தலைமை வகிக்கின்றார்.
புலனாய்வு அதிகாரிகள் பின்னர் மேலும் இரண்டு சோ.ச.க. உறுப்பினர்களின் வீட்டிற்கு சென்றனர்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோ.ச.க. மற்றும் ஏனைய சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களும் ஜூலை 6 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தொந்தரவு குறித்து புகார் கூறினர்.
சில்வா தனது ஆதாரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சோ.ச.க. வேட்பாளர்களை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொந்தரவு செய்தமை பற்றி ஜூன் 20 அன்று சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை.
சோ.ச.க. வேட்பாளர்களை விசாரிக்க வந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கூறிய சில பெயர்கள் மற்றும் திகதிகள் நேரங்கள் உட்பட இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை டயஸின் கடிதம் வழங்கியிருக்கின்றது.
தனது ஊடக அறிக்கையில் இராணுவத் தளபதி சில்வா ‚தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்‘ என்று வஞ்சத்தனமாக அறிவித்தார். சோ.ச.க. வழங்கிய விரிவான ஆதாரங்களை ஒப்புக் கொள்ள சில்வா மறுத்ததும் தமிழ் அரசியல்வாதிகள் ‚பொறுப்புடன் செயல்பட வேண்டும்‘ என்ற அவரது கோரிக்கையும் வடக்கில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிரான ஒரு மறைமுக அச்சுறுத்தலாகுமென அக்கட்சி தெரிவித்துள்ளது.