November 23, 2024

ராஜபக்சக்களுக்கு அடிபணியாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்! சஜித்…

கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக்கொண்டுள்ளார்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றுபவர்கள் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றதால் கொரோனா மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனவே, எதிரணியினரின் கருத்துக்களைப் புறந்தள்ளியுள்ள அரசும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இராணுவத் தளபதியின் கருத்துக்களையும், அதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஏற்கனவே விடுத்துள்ள அறிவுரைகளையும் கவனத்தில் கொண்டாவது மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்களின் உயிர் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களின் ஜனநாயக உரிமையும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை ஆகஸ்ட் 5ஆம் திகதி சுகாதாரப் பாதுகாப்புடன் நிறைவேற்றுவது மிகவும் கடினம்.

தேர்தல் காலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால், அதை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட அரசு பின்னடிக்கின்றது. அதை வர்த்தமானி அறிவித்தலாக உடன் வெளியிடுமாறு அரசிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதை வெளியிடுவதில் அரசு தயக்கம் காட்டுகின்றது.

இப்படிப்பட்ட அரசு தேர்தலை எப்படிப் பாதுகாப்பாக நடத்த ஒத்துழைக்கும்? எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.

அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இன்னமும் 20 நாட்கள் தானே தேர்தலுக்கு இருக்கின்றன என்ற நினைப்பில் தேர்தலைப் பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு பின்னடிக்கக்கூடாது.

தேர்தலுக்கு 5 நாட்கள் இருந்தால்கூட மக்களின் உயிரும் அவர்களின் ஜனநாயக உரிமையும் பாதுகாக்கப்பட்டு ,மதிக்கப்பட்டு நல்லதொரு சூழ்நிலையில்தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.