November 22, 2024

கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் பேசுகையில், “தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கபட்ட கூட்டமைப்பு தனித்துவமான வரலாற்றுத் தன்மை கொண்டது. மக்களின் ஆணை எமக்கு நிச்சயம் கிடைக்கும்.

வன்னியில் 5 ஆசனங்களை நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம். வடகிழக்கில் 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெறுவதற்கு நாம் முயற்சிசெய்வோம். கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படும் போது தேசியத் தலைவரின் சிந்தனையையும் பலவீனப்படுத்தும் நிலை காணப்படும்.

கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்பைத் தடுப்பதற்காக பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் வன்னியில் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அரணாக கூட்டமைப்பு என்றும் செயற்படும்.

சர்வதேசம் எமக்கு பதில்சொல்லவேண்டிய ஒரு நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உருவாக்கியுள்ளது. எனவே நாம் பலமான வெற்றிவாய்ப்பைப் பெறுவோம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

எம்மிலிருந்து பிரிந்தவர்களை கூட்டமைப்பே வெளி உலகிற்கு காட்டியிருந்தது. அந்த அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு தாம் பெரியவர்கள் என்று நினைத்துச்செல்பவர்கள் உண்மையிலேயே தோல்விகாண்பார்கள் ” என்றார்.