கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா பரவலை அடுத்து பாடசாலைகளுக்கு தற்காலிகமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்த நிலையில், மூன்றாவது கட்டத்தின் கீழ் கடந்த 13ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவிருந்தது.
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கு ஒருவார காலம் மேலதிக விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்தது.
இதற்கமைய மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என அமைச்சரிடம் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக விடுமுறை நிறைவு பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் காணப்படுவதால் இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மூன்றாம் கட்டத்திற்கு அமைவாக பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.