சவேந்திரசில்வா பேரூந்தில் வரட்டும்:சாள்ஸ்?
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்திளரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் இராணுவத் தளபதி கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,
“இராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா வடக்கில் இராணுவத்தினரால் வடக்கில் இடையூறு இல்லை என்று கூறுகின்றார். மாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 5 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. எனவே சவேந்திர சில்வா இ.போ.ச. பேருந்தில் வரவேண்டும். அதுவும் இராணுவ உடை இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் வர வேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.
தேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தினை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர். இதற்குக் காரணம், இராணுவ அதிகாரி வேட்பாளராக இருக்கின்றபோது அவர்கள் எந்த பிரதேசத்தினை நம்பி வேட்பாளராக இருந்தாரோ அந்த பிரதேசத்தில் ஆதரவு எனக்கு உள்ளது என்பதால் இவ்வாறு நடைபெற்றது.
எனவே, அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை அவர்கள் கையாளப் போகின்றனர். இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” – என்றார்