வடக்கில் பயமில்லை!
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மற்றும் கைதடி சித்த மருத்துவ வளாகம் என்பவை தொடர்பிலான கொரோனா பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார்.அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.இந்நிலையில் மாணவி மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எழுவை தீவிற்கு பொலனறுவையிலிருந்து வருகை தந்து நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட நபருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்றில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இவரோடு தங்கியிருந்தவர்களும் படகில் கொண்டு வந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள் .
இதனிடையே யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கைதடி சித்த ஆயுர்வேத பீட மாணவியினதும் கொரோனா பரிசோதனை அறிக்கை பிரகாரம் அவருக்கு தொற்று இல்லையென பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.