இன அழிப்பு பங்காளி ஓய்வில்?
36 வருடங்கள் கடற்படையில் கடையாற்றி ஓய்வுபெறவுள்ள கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று (14) இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கடற்பிராந்தியத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க கரையிலிருந்து வெகு தொலைவில் கப்பல்களை அனுப்பும் செயற்திட்டத்தை ஆரம்பித்த கடற்படைத் தளபதி அட்மிரல் டி சில்வாவின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிராந்தியங்களில் இடம்பெறும் சகல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளையும் முறியடிக்க முடிந்ததுடன், அவரின் வழிகாட்டலின்றி இதனை முன்னெடுப்பதானது ஒரு கனவாகவே அமைந்திருக்கும் எனவும் கூறினார்.
தனது சேவைக்காலத்தை பூர்த்தி செய்து வெளியேறிச் செல்லவுள்ள கடற்படை தளபதி அட்மிரல் டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற பிரியாவிடை வைபவத்தில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், முன்மாதிரியான தளபதியாக திகழ்ந்த இவர் முக்கியமான காலகட்டத்தில் கடற்படையை சரியான திசையை நோக்கி வழிநடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் முதல் கடல்சார் கோட்பாட்டை உருவாக்குதல், சுழியோடல் தளங்களான காலி மற்றும் திருகோணமலையில் கடலுக்கடியில் அருங்காட்சியகங்கள் அமைத்தல் மற்றும் படகு கட்டும் தள வசதிகள், 20 மீட்டர் நீளமான ரோந்து படகுகள் உற்பத்தி போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளை நோக்கி அவர் கடற்படையை வழிநடத்தினார்.
வைஸ் அட்மிரல் டி சில்வா, 2019 ஜனவரி 1ஆம் திகதியன்று கடற்படையின் 23 வது தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு திறமையான சுழியோடி ஆவார், அவர் பல ஆண்டுகளாக சுழியோடல் நிபுணர்களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலையடுத்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தை விரைவாக புனரமைப்பதில் கடற்படைத் தளபதியும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி, இராணுவத் தளபதியும் அவரின் பாரியார் சுஜீவா நெல்சன், விமானப்படைத் தளபதியும் அவரது பாரியார் பிரபாவி டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் அவரின் பாரியார் பிரியங்கி விக்ரமரத்ன, அமைச்சின் மேலதி செயலாளர்கள் , தேசிய புலனாய்வு தலைவர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.