November 25, 2024

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்திப்பு!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசியுள்ளார். 

மத்தியபிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். இதனால் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி அடைந்திருந்தார். இந்நிலையில் மாநிலங்களவை இடம் தொடர்பாக அவருக்கு காங்கிரஸ் தலைமையுடன் முரண்பாடு ஏற்பட்டதால், அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். மேலும் அவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததும், மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸில் இருந்து விலகிய அனைவரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரத்யூமன் சிங் லோதி பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் படா மல்ஹெரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச சட்டமன்றத்தில் தற்போது 24 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 22 பேர் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உயிரிழந்து விட்டனர். இதனால் 24 இடங்களுக்குமான தேர்தல் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. தற்போது பாஜகவில் 107 எம்.எல்.ஏ- க்கள் மற்றும் காங்கிரஸின் 91 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். மத்தியபிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற 9 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.