தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்?
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் அநுராதபுரத்திலிருந்து கடந்த முதலாம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு வந்து, மறுநாள் அநுராதபுரத்திலுள்ள திஸ்ஸவெவவிலுள்ள தமது முகாமிற்கு திரும்பியுள்ளார். எனினும், உறவின் ஒருவரின் இறுதிச்சடங்கு ஒன்றிற்காக நேராக, ராஜங்கனையவிற்கு சென்றுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார்.
இறுதி சடங்கு மற்றும் அதை தொடர்ந்த சடங்குககில் கலந்து கொண்ட 230 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஆலோசகரின் இரண்டு பிள்ளைகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 11 வயது மற்றும் ஒன்றரை வயதுடையவர்கள்.
வைரஸால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் ஜூலை 4, 6 மற்றும் 07 ஆகிய திகதிகளில் பள்ளிக்குச் சென்றதாகவும், அவரது வகுப்பில் 70 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
வீடுகளுக்கு சென்றுள்ள புனர்வாழ்வுநிலையத்தின் பணியாளர்கள்,போதனையாளர்கள்,மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை பார்வையிட வந்தவர்கள் ஆகிய மூன்றுபிரிவினரையே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்ககூடியவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை ஏற்கனவே தனிமைப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் தற்காலிக போதனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை 116 பேர் சென்றுபார்த்துள்ளனர்,441குடும்ப உறுப்பினர்களும் பார்வையிடவந்தவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் 328 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.