மரத்தில் ஒட்டுண்ணி! வீட்டுக்குள் ஒட்டகம்? பனங்காட்டான்
சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியின் தாக்கமே மூத்த போராளி ஒருவர் சுமந்திரனைத் தோற்கடியுங்களென பொதுமக்களிடம் கோரிக்கைவிட வித்தாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர் தமிழரசு என்ற மரத்திலுள்ள ஒட்டுண்ணியை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்ததாக, வீட்டுக்குள் புகுந்துள்ள ஒட்டகத்தை வெளியேற்றுமாறு ஒரு குரல் எவ்வேளையில் வந்தாலும் ஆச்சரியப்பட நேராது.
தேர்தல் காலம் என்பது பொதுவாகவே சூடு பறக்கும் காலம். ஆனால், இப்போதைய இலங்கைத் தேர்தல் காலத்தில் அனல் பறக்கிறது.
தெற்கில் ரணிலும் சஜித்தும் தமக்குள் குடுமிபிடிச் சண்டை நடத்திக் கொண்டிருக்க, ராஜபக்ச சகோதரர்கள் கிளித்தட்டு விளையாட்டில் இலகுவாகப் பழம் பறிப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இவர்கள் எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேர்தலில் கிடைக்காவிட்டாலும், அதன் பின்னர் அதனை எவ்வாறு பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியும்.
அந்த ஆதரவை வழங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாமாகவே முன்வந்துள்ளபோதிலும், அதனை வேண்டாமென்று மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டதை கடந்த வாரம் இப்பத்தியில் பார்த்தோம்.
ஆனால், சிங்களத் தரப்பின் ஆதரவை ஏற்க மாட்டோமென்று அவர் இதுவரை கூறவில்லை. இதானாற்தான் போலும், சஜித் அணி மகிந்தவோடு இணையலாமென ரணில் தரப்பும், இல்லை – ரணில் தரப்பு மகிந்தவோடு சேரலாமென சஜித் அணியினரும் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு தங்களுக்குத் தேவையில்லையென மகிந்த கூறியதற்கு நிகராக ரணில் விக்கிரமசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
‚எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஏனைய இன (தமிழ் – முஸ்லிம்) பிரதிநிதிகளை உருவாக்குவோம்“ என்று ரணில் கூறியுள்ளதை சிங்கள இணையத் தளமொன்று வெளியிட்டுள்ளது.
தனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் கோதபாய கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்த மாத பொதுத்தேர்தலில் அதே சிங்கள பௌத்த வாக்குகளால் தாம் வெற்றி பெறுவோமென்று மகிந்த கூறிவருவதும், அதே திசையிலான இனவாதப் போக்குத்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு இனி விடிவு கொடுக்கலாமென ரணில் எண்ணுவதுபோல் தெரிகிறது.
நல்லாட்சி அரசுக்கு நான்கரையாண்டுகள் முண்டு கொடுத்து ஏமாற்றப்பட்ட கூட்டமைப்பின் கண்களை, ரணிலின் இனவாதக் கூற்று திறக்க வேண்டும். ஆனால், வசதி கருதி கண்களை மூடிக்கொண்டேயிருந்தால் தொடர்ந்து ஏமாற்றப்படுவது தமிழினம்தான்.
ரணிலின் தமிழர் தொடர்பான அரசியல் பற்றி கொழும்பிலுள்ள பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடும்போது அவர் குறிப்பிட்ட விடயமொன்றை அவ்வாறே இங்கு குறிப்பிடுவது காலத்த்pன் தேவையாகவுள்ளது. இது, இப்போது பல சர்ச்சைகளுக்குட்பட்டிருக்கும் சுமந்திரன் சம்பந்தப்பட்டது.
2010ம் ஆண்டு சுமந்திரன் எவ்வாறு கூட்டமைப்புக்குள் புகுத்தப்பட்டாரென்பதை அவர் தெரிவிக்கையில், இலங்கை விவகாரத்தில் நீண்டகாலமாக கண்களுக்குப் புலப்படும் வகையிலும் – சிலசமயம் கண்களுக்குப் புலப்படாத வகையிலும் செயற்படும் முக்கிய நாடொன்றினால், ரணிலின் ஊடாக உட்புகுத்தப்பட்டவர் சுமந்திரன் என்று சொன்னார்.
மைத்திரிபால சிறிசேன ஐம்பத்திரண்டு நாட்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய வேளையில், தமிழ் மக்கள் நலனில் காட்டிய அக்கறையிலும் பார்க்க பல நூறு மடங்கு மேலாக அவரை மீண்டும் பிரதமர் கதிரைக்குக் கொண்டு வருவதில் சுமந்திரன் காட்டிய அதீத அக்கறையை இதற்கு ஓர் உதாரணமாக அந்த ஊடக நண்பர் எடுத்துச் சொன்னார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் வழியாக அவரின் உட்கிடக்கையும், மறைத்து வைத்திருந்த தேசிய நீக்க அரசியல் கொள்கையும், தமிழீழ விடுதலைப் போராட்ட எதிர்ப்புச் சிந்தனையும் வெளியானதையடுத்து பரவலாக இவர் பற்றிய பல கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டனர் என்பதையும், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் விடுதலைப் போராட்டம் ஏன் இடம்பெற்றது என்பதையும், முப்பதாண்டுகால தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் சுமந்திரன் எவ்வாறு பார்த்தாரென்பதை மொத்த தமிழ்ச் சமூகமும் நன்கு அறிந்து கொண்டுவிட்டது.
அவரது கருத்து வெளிப்பாடுகளின்படி பார்க்கையில் முற்றுமுழுதாக தமிழ் இளையோரின் விடுதலைப் போராட்டத்தை அவர் எதிர்த்தே வந்துள்ளாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியாயின் 2010ல் பின்கதவால் (தேசியப் பட்டியல்) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் நியமனம் பெறக்கூடிய சூழ்நிலை எவ்வாறு உருவானது?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற மக்களின் மனப்பதிவின் காரணமாகவே 2009க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எண்ணிப்போடாமல் அள்ளிப்போட்டு கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தனர். இந்த அமோக வெற்றிக்கு திரட்சியாகக் கிடைத்த வாக்குகள் காரணமாகவே 2004ம் ஆண்டுத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களும், 2010ம் ஆண்டுத் தேர்தலில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும் கூட்டமைப்புக்குக் கிடைத்தது.
சுமந்திரன் 2010ல் தேசியப் பட்டியலூடாக நியமனம் ஆவதற்கு வழிகோலியது விடுதலைப் புலிகளுக்கூடாக கூட்டமைப்பை பொதுமக்கள் பார்த்து தங்கள் வாக்குகளை அதற்கு வழங்கியதுதானென்பதை எவராலும் மறுக்க முடியாது. அன்று இவ்வாறு நியமனம் பெற்றிருக்காவிடின் 2015ம் ஆண்டுத் தேர்தலில் சுமந்திரனால் வெற்றி பெற்றிருக்க முடியாதென்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் நின்றே, அண்மையில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான பசீர் காக்கா வெளிப்படுத்திய கருத்தை நோக்க வேண்டும்.
யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் இவர் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இவரது கருத்தைப் பகிர்வதற்கு முன்னர் பசீர் காக்கா யார் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
முத்துக்குமார் மனோகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போராட்ட ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பின் தளபதியாகவிருந்தவர். அவ்வேளை முஸ்லிம் சகோதர்களால் பசீர் காக்கா என அழைக்கப்பட்டதுடன் இப்பெயர் அவருடன் இணைந்து கொண்டது. மட்டக்களப்பில் நித்தியானந்தன், நிர்மலா உட்பட அனேகர் சிறையிலிருந்து நள்ளிரவில் மீட்கப்பட்டமை இவர் காலத்து முக்கிய செயற்பாடுகளில் ஒன்று.
பின்னர் யாழ்ப்பாணத்தில் தளபதி கிட்டு அவர்களின் காலத்தில் பல்துறை செயற்பாடுகளில் பங்கேற்றவர். 1980களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் யாழ். ஈழமுரசு பத்திரிகை வெளிவந்தபோது அதன் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர். மாவீரர் அறிவிழியின் தந்தை இவர்.
சுமந்திரனுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாதென்பதை நீண்ட அறிக்கையின் வாயிலாக இவர் வெளியிட்டுள்ளார். அதன் முக்கியமான ஒரு பகுதியை கீழே காணலாம்.
‚எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரியோ பிழையோ அதற்கு வாக்களிப்பு என்பது தமது கடமையென கணிசமானோர் கருதுகின்றனர். இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தீர்மானிப்போர் சுமந்திரனைத் தவிர வேறு மூன்று வேட்பாளர் எவருக்காவது வாக்களிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறேன்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை என்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுமந்திரனை தோற்கடிக்க வேண்டுமென இந்த அறிக்கை நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுமந்திரனைத் தோற்கடிப்பது வரலாற்றுக் கடமையென்றும், துயிலும் இல்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது என்றும் மூத்த போராளி பசீர் காக்கா விடுத்துள்ள வேண்டுகோள் நிச்சயமாக சேர வேண்டிய இடங்களுக்கு சேர்ந்திருக்குமென நம்பலாம்.
சுமந்திரனை தோற்கடியுங்கள் என்ற வேண்டுகோளுக்கு சகல தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.களில் ஒருவரான சரவணபவனின் யாழ். உதயன் பத்திரிகை இதனை முன்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டதனூடாக உள்வீட்டுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சனை இப்போது பூதாகரமாகியுள்ளது.
இந்தச் செய்தியை வெளியிட்டதனூடாக சரவணபவனின் உள்ளார்ந்த திட்டத்தை கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு வெளிப்படுத்த விரும்பிய சுமந்திரன், அந்தச் செய்தி வந்த இதழின் இலவச விநியோகத்தராக மாறி பிரச்சனைக்கு மேலும் தூபமிட்டார்.
இதன் அடுத்த கட்டமாக சரவணபவன் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தினார். மூத்த போராளி பசீர் காக்கா ஊடகவியலாளர்களைச் சந்தித்த அதே ஊடக மையத்திலேயே இவரது ஊடகச் சந்திப்பும் இடம்பெற்றது. தம்மை ஓர் ஊடகப்போராளியாக இதுவரை காலமும் கூறிவந்த சரவணபவன் – அந்த அடையாளத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக இடம்பிடித்தார் என்பது வரலாறு. ஆனால். சுமந்திரன் சம்பந்தப்பட்ட செய்தி விடயத்தில் தம்மை அதில் சம்பந்தப்பட்டவராக காட்டிக்கொள்ள விரும்பாது, தமது பத்திரிகையில் வெளிவரும் செய்திகள் விடயத்தில் தாம் ஒருபோதும் சம்பந்தப்பட்டதில்லையென்று இங்கு தெரிவித்தது எவராலும் நம்பக்ககூடியதன்று.
அதாவது, தமது உதயன் பத்திரிகை எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி சுயாதீனமாக இயங்குவது என்பதாகக்கூறி பொதுமக்களை நம்பவைக்க அவர் எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போனதென்றே சொல்ல வேண்டும். தற்போதைய களநிலைவரத்தில் விருப்பு வாக்குகளைப் பெறும் விடயத்தில் கூட்டமைப்பில் போட்டியிடும் ஐந்து முன்னாள் எம்.பி.களும் கையில் அரிவாளுடன் உலாவருவதை வாக்காளர்கள் நன்கறிவர். அதன் ஒரு கட்டமே சுமந்திரனைத் தோற்கடியுங்கள் என்ற செய்திக்கான முக்கியத்துவம்.
இதனை நிரூபிக்கும் வகையில் சரவணபவன் தெரிவித்த ஒரு கருத்து அவதானிக்கப்படுகிறது. தமிழரசுக் கட்சி என்ற மரத்தில் ஒட்டுண்ணியாக (குருவிச்சைபோல) இருப்பவர்களை அகற்ற வேண்டுமென இங்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இவர் அடையாளப்படுத்திய ஒட்டுண்ணி சுமந்திரனே என்பதை விளக்கத் தேவையில்லை.
இந்தத் தேர்தலில் கைக்கூலிகள், களவாணிகள், போலிப்புலிகள் என்ற புதிய சொற்றொடர்களின் வரிசையில் ஒட்டுண்ணி ஆகப்பிந்தியது.
1947ல் தந்தை செல்வா தலைமையில் அத்திரவாரமிடப்பட்ட வீட்டை, மீளக் கட்டியெழுப்பியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைந்துள்ள வேளையில் அந்த வீடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டை வெளியார் எவரும் சிதைக்கவில்லை. உள்ளிருப்பவர்களே அந்தக் கைங்கரியத்தைச் செய்கின்றனர். ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் படலம் கச்சிதமாக இடம்பெறுகிறது.
தேர்தலுக்கு முன்னர் வீட்டுக்குள் புகுந்த ஒட்டகத்தை அடித்து விரட்டுங்கள் என்று குரல் வந்தாலும் ஆச்சரியப்பட நேராது.