November 22, 2024

தடை தாண்டி நவாலியில் அஞ்சலி!

நவாலி படுகொலை எனப்படும் சென் பீற்றர்ஸ்; தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் அதனையும் தாண்டி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளன்று  இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.
நினைவு தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக காவல்துறையினர்; தடை ஏற்படுத்தி இருந்தனர்.
பின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர். எனினும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை அனுமதிக்கவில்லை.
இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது காவல்துறை அதிகாரியொருவர் அவரை இழுத்து விழுத்த முற்பட்டார். இருந்த போதிலும் அதனையும் மீறி சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.