பல கோடி ரூபாய் சொத்து… கணவனுடன் அழகான வாழ்க்கை! சந்தேகத்தால் சிதைந்த இலங்கை பெண் குடும்பம்… வெளியான தகவல்
இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவத்தில், அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
குவைத்தில் வேலை பார்த்து வந்த யூசப் என்பவர், அங்கு இலங்கையை சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து தமிழகத்தில் சொத்துக்களை வாங்கிப் போட்ட இவர்கள் தஞ்சாவூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அசிலாவை வீட்டை விட்டு வெளியேற்றிய யூசப் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் இதை எல்லாம் தாங்காமல், அசிலா கூலிப்படை வைத்து யூசப்பை தீர்த்து காட்டினார்.
அசிலாவுக்கு இலங்கையில் 2 கோடி சொத்து இருப்பதாகவும், யூசப்பிற்கு 15 கோடி சொத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது அசிலா பொலிசாரிடம் அளித்துள்ள விசாரணையின் அனைத்து விவரமும் வெளியாகியுள்ளது.
விசாரணையின் போது அசிலா பொலிசாரிடம், இலங்கையைச் சேர்ந்த நானும் யூசுப்பும் குவைத்தில் வேலை செய்தபோது உயிருக்கு உயிராகக் காதலித்தோம்.
அதன்பிறகு, தஞ்சாவூருக்கு வந்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.
குவைத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து பல்வேறு சொத்துகளை வாங்கினோம். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தோம். யூசுப் குவைத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது தஞ்சாவூருக்கு வருவார். இதற்கிடையே ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
சொத்துகளை வாங்குவதற்கு தஞ்சை பர்மா பஜாரில் அமைந்துள்ள பெரிய செல்போன் ஷாப்பிங் கடையில் இருக்கும் ஒருவர் எங்களுக்கு பல உதவிகளைச் செய்தார்.
அவர் மூலமாகத்தான் வெளிநாட்டுப் பணத்தை இந்திய பணமாக மாற்றினோம். இதனால் பலரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் யூசுப் என் மீது சந்தேகப்பட தொடங்கினார்.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டையும் ஏற்படத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து யூசுப் குவைத்துக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
பைனான்ஸ் தொழிலும் பெரிய அளவில் வளர்ந்தது. அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாயப் பண்ணை என 20 கோடி ரூபாய்க்கான சொத்துகள் உள்ளன.
வெளியில் கடனாகப் பெரும் தொகையைக் கொடுத்திருந்தோம். திருச்சியில் சிறைக் காவலராக இருந்த செந்தில்குமார் என்பவருடன் பழகினேன். இதுவும் யூசுப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்தது.
யூசுப் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். அந்தப் பெண்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கத் தொடங்கினார். இதனால், தனியார் வங்கியிலிருந்த லாக்கரை அதன் மேனேஜர் உதவியுடன் உடைத்து 300 பவுன் நகை, சொத்துப் பத்திரம் உள்ளிட்டவற்றை எடுத்துவிட்டேன்.
இதில் கோபமடைந்த யூசுப் என் மீது புகார் கொடுத்ததால், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். வெளியே வந்த பின்பு யூசப் என்னை சேர்த்து கொள்ளாததால், திருச்சியில் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தேன்.
அவர் எங்களுக்கு எதையும் செய்யவில்லை, பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், யூசுப்பின் சொந்த அத்தை மகள். அவருக்கும் பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளார். இதே போல் பலர் யூசுப்பிடம் பணம் வாங்கி பயன் அடைந்தனர்.
இடையில் என்னிடம் சமாதானம் பேசியதுடன் அவ்வப்போது திருச்சிக்கும் வந்து சென்றார். ஆனால், நான் வேறு பெண்களுடன் இருக்கும் தொடர்பை நிறுத்திக்கொள்ளுங்கள் எனக் கண்டித்தேன். அவர் கேட்கவில்லை.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரைக் கொலை செய்துவிட்டு சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினேன். சில முறை கொலை செய்வதற்கு முயன்றும் அதிலிருந்து அவர் தப்பிவிட்டார்.
அதன் பின் யூசுப்பை தீர்த்துக்கட்ட சிலரின் உதவியுடன் கூலிப்படையைச் சேர்ந்த சகாயம் என்கிற சகாதேவனை அனுகினேன்.
அவர் மூலமாக யூசுப்பை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினேன். சகாதேவன் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் தஞ்சை வந்து நோட்டமிட்டார். என் கணவரிடம், வீடு பிடித்திருக்கிறது எனக் கூறி அட்வான்ஸ் தருவதற்காக வரவழைத்து, அவரை கொன்றுவிட்டதாக கூறினார்.