November 22, 2024

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது..!!வெளியான தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது..!!வெளியான தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300 க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவும். ஒரு மனிதர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது.

அதை மாற்றி, காற்றில் கொரோனா வைரஸ் பரவும். ஒருவர் தும்மியபின், இருமியபின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் அந்த நுண் கொரோனா வைரஸை உள்ளே சுவாசித்தால் அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று அறிவிக்க வேண்டும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரினர். ஆய்வாளர்கள் அனுப்பிய பரிந்துரையை ஆய்வு செய்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசும்போது, ”கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என்று ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது” என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மற்றும் நோய்த்தொற்றுப் பிரிவின் தலைமை அதிகாரி பென்னிடெட்டா அலிகிரான்ஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதை நாங்கள் ஏற்கிறோம்.

ஆனால், அது உறுதியானது அல்ல. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள். மூடப்பட்ட இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பது, காற்று வசதி இல்லாத இடம் போன்றவற்றில் கொரோனா வைரஸ் காற்றில் பரவும். அதேசமயம் ஆய்வாளர்கள் அளித்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரும் கொலராடா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான ஜோஸ் ஜெமினிஸ் அளித்த பேட்டியில், “நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கு அளித்த ஆதாரங்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

காற்றில் கொரோனா வைரஸ் பரவுகிறது. நாங்கள் அளித்த அறிக்கை உலக சுகாதார அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் என நினைக்க வேண்டாம். அவ்வாறு கிடையாது. இது அறிவியல் ரீதியான விவாதம், மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக வேண்டும். அவர்களுடன் பலமுறை கூறியபோது, ஆதாரம் கேட்டதால், அதற்கான ஆதாரங்களை இப்போது அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.