தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போகிறேன்!- பாலித தெவரப்பெரும
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு அருகில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இறந்து போன எனது மகனின் பெயரில் தானம் வழங்குவதற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றை அப்புறப்படுத்த சென்ற மத்துகமை பொலிஸார் சிலர், எனது மனைவியை தள்ளி விட்டதன் காரணமாக அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய வந்தேன்.
இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்த தொல்லைகள் காரணமாக எனது மனைவியும் மகனும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நான் அரசியலில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே இந்த தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன.
இதனால், எனது மனைவி, பிள்ளைகளின் பெறுமதியை நான் புரிந்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசியலில் இருந்து விலகி, மனைவி, மகனுடன் வாழ போகிறேன்.
இது தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் எப்போதும் பிரச்சினை இருந்ததில்லை. சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகளுக்கு எதிராக இம்முறை தேர்தலில் களம் இறங்கினேன்.
எனக்கு கொடுக்கப்படும் இந்த தொல்லைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் என நான் நினைக்கின்றேன். இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்துறை செயலாளரை சந்தித்து அதனடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்தேன். ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே, ரணில் விக்ரமசிங்க மீதோ எனக்கு இருக்கும் அதிருப்தி காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.