November 22, 2024

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த குடியேறி என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான நடராஜ் செட்டியார் எனும் ராஜ் செட்டி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள புதுவயலைப் பூர்விகமாகக் கொண்டவர்.

இவர் தந்தையார் பெயர் கருப்பன் செட்டி, டெல்லியில் புள்ளியில் துறையில் பணியாற்றியவர். இவர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தவர்.

கருப்பன் செட்டியின் மனைவி அன்புக்கிளி ஆச்சி காரைக்குடியில் பிறந்தவர். செட்டியார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற புகழ் பெற்றவர்.

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராகப் பணியாற்றியவர்.

ராஜ் செட்டி தனது ஆரம்பக் கல்வியை டெல்லியில் முடித்தார். அதன் பிறகு பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததால் தனது 8 வயதில் அமெரிக்காவிற்கு பறந்தார்.

அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து தன்னுடைய 23-வது வயதில் பெர்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

28-ஆம் வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான ராஜ் செட்டி இளம் வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆனவர் என்ற பெருமையை பெற்றார்.

இவரது மனைவி சுந்தரி ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு 5 லட்சம் டாலர் ஜீனியஸ் கிராண்ட், 2013-ல் பேபி நோபல் பரிசு என அழைக்கப்படும் John Bates Clark Medal, 2015-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றால் கவுரவிக்கப்பட்ட ராஜ் செட்டி, அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர்.

உலகின் தலைசிறந்த 10 பொருளாதார மேதைகளில் டாக்டர் ராஜ் செட்டியும் ஒருவர் என்று கருதப்படுகிறது. கொரோனாவால் கடும் பாதிப்பு சந்தித்து வரும் அமெரிக்கா, பொருளாதாரத்திலும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்காக ராஜ் செட்டி வழிமுறைகளை வழங்கினார்.

இதனால் பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்காக வழிமுறைகளைக் கூறியதற்காக, ராஜ் செட்டிக்கு சிறந்த குடியேறி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் இந்த விருது அமெரிக்க சுதந்திர தினமான கடந்த 4-ஆம் திகதி ராஜ் செட்டிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து இணையவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.