ஸ்ரீலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் (Duty-Free shops) மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன
இவை காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை வந்த விமானப் பயணிகளுக்காக மாத்திரம் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் முன்னர், விமான நிலையத்தை தொடர்புக்கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நபர்கள் தாம் தனிமைப்படுத்தப்பட்டமைக்காக தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமைக்காக பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
இதனை தவிர கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாகும்.
அத்துடன் விமான நிலையத்தின் பணத்தை பரிமாற்றம் செய்ய சந்தர்ப்பம் இல்லை என்பதால், தேவையான டொலர்களை கொண்டு வரவேண்டும்.
அப்படியில்லை என்றால், கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.