நாங்களே பிரதான அரசியல் எதிரணி என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்:சஜித் பிரேமதாச
நாட்டின் பிரதான அரசியல் எதிரியாக தொலைபேசி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தன்னை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இனவாதிகளின் கைக்கூலி என்ற தலைப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெலிவிட்ட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.
2010, 1015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவியை கைப்பற்றி நாட்டின் பெரும்பான்மை மக்களை மிதித்து விட்டு, நாட்டை பிரிவிக்க ஒன்றிணைந்த கூட்டம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் விமர்சித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆரம்பத்தில் இணைந்து இருந்த நபர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது.சஜித் பிரேமதாசவுக்கு அதனை செய்ய முடியும் என கூறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச,
நாங்களே பிரதான அரசியல் எதிரி என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். எம்மை சுற்றி மக்கள் பெருமளவில் கூடி வருகின்றனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாவை வழங்குவது கப்பம் கொடுக்கும் அரசியல் என அவர் கூறுகிறார்.
13 பிளஸ், 13 மைனஸ் ஆகிய இரண்டின் பிதா மகனாக செயற்பட்டது தற்போதைய பிரதமர் என்பதை நான் கூறி வைக்க விரும்புகிறேன்.
கௌரவ பிரதமர் அவர்களே, இனவாதத்தில், இன பேதங்களில்,மத பேதங்களில் மற்றும் அடிப்படைவாதங்களில் நாட்டை பாதுகாக்க முடியாது.
ஒரே இலங்கைக்குள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டுமாயின், தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டுமாயின் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்புறவு அவசியம் என்பதை நான் முற்றாக நம்புகின்றேன். அப்போது தான் நாடு பாதுகாக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஏனைய மதங்களை மாத்திரமல்ல சிங்கள பௌத்த நாட்டையும் பாதுகாக்க வேண்டும். பயங்கரவாதத்துடன், இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்.
ஒரே இலங்கைக்குள் அரசியலமைப்புச் சட்டத்தின் 13 வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் மாகாண சபைகள் முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.