November 22, 2024

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடரும் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 120+ அகதிகளை விடுவிக்கக்கோரி இப்போராட்டம் நடைபெற்றிருக்கின்றது.

இப்போராட்டத்தினை நடத்த 2 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தை கடந்து தர்ணா செய்த 37 பேரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற இந்த அகதிகள் பல ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து செல்லப்பட்ட இந்த அகதிகள் சுமார் ஓர் ஆண்டாக தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
“போக்குவரத்து இடையூறைக் குறைக்க மைய வீதியை முடக்குவதில்லை என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தீர்மானித்திருந்தனர். ஆனால், இறுதியில் அந்த வீதி போராட்டக்காரர்களால் முடக்கப்படவில்லை, காவல்துறையினரின் வாகனங்களே அவ்வீதியில் வரிசைக்கட்டி நின்றன,” எனக் கூறியுள்ளார் பசுமைக்கட்சியைச் சேர்ந்த பிரிஸ்பேன் நகர கவுன்சிலரான Jonathan Sri. இவர் அகதிகளை விடுவிக்கக்கோரி முன்பு நடந்த போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.