November 22, 2024

மடு மாதாவின் ஆடித் திருவிழா..!!

மடு மாதாவின் ஆடித் திருவிழா..!!

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் இடம் பெற்று நேற்று புதன் கிழமை மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி பெரேரா, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடுஅன்னையின் ஆசிர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழாவில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராணுவம்,பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வருகை தந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.