ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான விஜயல மகேஸ்வரன் தெரிவித்தார்
தும்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாட்டின் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள்.
கடந்த நல்லாட்சி அரசாங்கமானது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியதோடு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஊடாக அபிவிருத்தியினை முன்னெடுத்தது.
அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினையும் நல்லாட்சி அரசாங்கமானது வழங்கியது. எனினும் தற்போதைய ஆட்சியில் ராணுவத்தினர் வீடு வீடாக சென்று சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணிமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவை எதற்காக செய்யப்படுகிறது என நான் ஜனாதிபதியை கேட்க விரும்புகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை பழிவாங்கும் முகமாக இடைநிறுத்தியுள்ள அரசாங்கம் தற்போது ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ராணுவத்தினர் தெல்லிப்பளை மானிப்பாய் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று இளைஞர் யுவதிகளின் சுயவிபரக்கோவையினை சேகரித்து வருகிறார்கள்.
தமது வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக இந்த வேலையினை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த விடயமானது மிகவும் பாரதூரமான விடயமாக காணப்படுகின்றது. கட்சி பேதமின்றி அனைவருக்கும் அரச வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதி கட்சி பேதமின்றி விகிதாசார அடிப்படையில் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும்.
நிறுத்தப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கையினை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.