November 22, 2024

எனக்கும் கனடா நிதி வருகின்றது:சிவி!

இரட்ணகுமார் வன்னிக்குப் புதியவர் அல்லர். அவரின் அறிவையும் அனுபவத்தையும் எமது கூட்டணி மதிக்கின்றது. சொல்லும் சொல்லுக்கு மதிப்பளிப்பவர் அவர். அவருக்கு உங்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை நான் உணர்கின்றேன்; என தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை நாம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வட்டுகோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தோம். அந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறி இருந்தேன். காரணம் சில கட்சிகள் அதனை முற்றிலும் நிராகரித்தது போல் செயற்படுகின்றார்கள். இது பற்றி என்னிடம் கேள்வி எழுப்பிய சிலர் அப்படியானால் தனி நாட்டு கோரிக்கையை நீங்கள் கைவிடவில்லை என்று இதன் மூலம் கூறுகின்றீர்களா என்று கேட்டார்கள். இதுபற்றி நான் சுருக்கமாக விளக்கவேண்டி இருக்கிறது. தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களான இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஷ;டி தீர்வு ஒன்றினை அடைவதே எனது கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நோக்கம் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றோம்.
அதேவேளை நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தினை கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறியதும் உண்மைதான். வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஒரு வரலாற்று உண்மை. அதனை நாம் எமது வரலாற்று புத்தகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது. வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதிலே, சமதர்மத் தமிழீழ அரசை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரு விடயம் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் இன்றும் அவசியமானவை மற்றும் பொருத்தமானவையுங் கூட. எந்த சந்தர்ப்பதிலும் தனி நாடு ஒன்றை அமைக்கப் பாடுபடப்போவதாக நாம் குறிப்பிட்டது கிடையாது. எமது கோரிக்கை சமஷ;டி அரசியல் முறை எனினும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் சுய நிர்ணய உரிமை, சாதி ஒழிப்பு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பல விடயங்களை வட்டுக்கோட்டை தீர்மானம் வலியுறுத்துகின்றது. இவற்றை தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிட முடியாது. ஆகவே தான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிட்டதாக அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தேன்.
இன்றைய தினம் நாங்கள் எம்மக்களுக்காக ஒன்றிணைந்து உங்கள் முன் வாக்கு கேட்க வந்திருக்கின்றோம். எமது கூட்டணியில் வேறு சிலரையும் இணைத்துக் கொள்வதற்காக முயன்றிருந்தோம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அது இம்முறை கைகூடி வரவில்லை. எதிர்காலத்தில் ஒத்த கொள்கையுடையவர்களை ஒன்றாக இணைப்பதற்காக தொடர்ந்து முயற்சிப்போம்.
எம்மை மாற்றுத் தலைமை என்று பலர் கூறுகின்றார்கள். ஆனால் மாற்றுத் தலைமை என்று கூறுவது நாம் மாற்றுக் கொள்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றோம் என்று பொருள் அல்ல. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் எல்லாமே இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ;டி தீர்வினையே கோருகின்றன. தேர்தல்  விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட சமஷ;டி பற்றியும், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும், இறையாண்மை பற்றியும் கூறி வந்துள்ளது. ஆனால், அரசாங்கங்களுக்கு முண்டு கொடுப்பதன் மூலமும் இனப்படுகொலைக்கு நீதி கோரி எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை மழுங்கடிப்பதன் மூலமும் அரசாங்கத்தை குளிரச் செய்து ஏதோ ஒரு தீர்வினை பெற்றுவிடலாம் என்ற வழி வரைபடத்தின் அடிப்படையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது. அத்துடன் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சமஷ;டி கோட்பாடுகளையும் தாயக கோட்பாடுகளையும் சாத்தியம் அற்றவை என்று கூட்டமைப்பு காற்றில் பறக்க விடுவது வரலாறு. அது உங்களுக்குத் தெரியும்.
ஆனால், தமிழ் தேசிய கோட்பாடுகளை அடைவதற்கான மாறுபட்ட வழிமுறைகளை முன்வைத்திருப்பதன் மூலமும் அவற்றை பற்றுறுதியுடன் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமும் மாற்று அணியாக நாம் பரிணமித்துள்ளோம்.  6 வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சராகப் பதவி ஏற்று யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களைச் சந்தித்து, எமது மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதைப் பகுத்தறிந்து உணர்ந்துகொண்டேன். இதன்காரணமாக,  எத்தகைய ஒரு பெரும் பொறுப்பு எம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எத்தனை இடர் வந்தாலும் எமது உரிமைகள் விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது காட்டிக்கொடுப்புகளையோ நான் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் தான், கடும் அழுத்தங்கள்  பிரயோகிக்கப்பட்ட போதிலும் இனப்படுகொலை தீர்மானத்தை கைவிடவோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்யவோ நான் தயாராக இருக்கவில்லை. உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது நீரோ பிடில் வாசித்தது போல்த்தான் நடந்து கொண்டிருந்தார்கள். பிரச்சனைகளை அப்படியே விட்டு விட்டு தமது சுயலாப சிந்தனைகளில் இலயித்திருந்தார்கள்.
எனக்கு சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்புகள் காரணமாக நான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டிருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பிட்டு துதி பாடி இருந்திருந்தால் எனது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பல செயற்திட்டங்களை இங்கு முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமை போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி பெரும் துரோகத்தை நான் இழைத்திருப்பேன். அதனால் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் இதன் காரணமாக முரண்பட நேர்ந்தது.  பல மாத காலம் ரணில் விக்கிரமசிங்க என்னுடன் கதைக்கவில்லை. எனது முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து வந்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், எனது 5 வருட கால முதலமைச்சர் காலத்தில் முடிந்தளவுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. அரசுடன் நான் முரண்பட்டதாலோ என்னவோ எமக்கு அரசாங்கம் போதிய நிதியை அனுப்பவில்லை. ஆனாலும் நாம் கிடைத்த நிதியை வைத்து சிறப்பாகவே செயற்பட்டிருக்கின்றோம். பல்வேறு திட்டங்களை மேற்கொண்டோம். புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியைப் பெற்று சில செயற்திட்டங்களை மேற்கொண்டோம். ஆனாலும், அரசாங்கம் எதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. உதாரணமாக, நான் கனடா சென்ற போது அங்குள்ள சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒருதொகை நிதியை சேகரித்தார்கள். ஆனால், அந்த நிதியை நான் எடுத்துவர மறுத்துவிட்டேன். சட்டப்படி அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனவே அப்பணத்தை இங்கு கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. ஏன் என்றால் முதலமைச்சர் நிதியத்தை தாக்காட்டித் தாக்காட்டி கடைசியில் அனுமதிக்காது விட்டிருந்தார்கள் அரசாங்கத்தினர். தற்பொழுது நான் உருவாக்கியுள்ள நம்பிக்கை பொறுப்பின் ஊடாக அந்த நிதியைப் பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். இது பற்றி விபரமாக பின்னர் அறிவிப்பேன்.
வட மாகாண சபைக்கு முதலமைச்சர் நிதியத்தை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவிடாத காரணம் நிதியம் அனுமதிக்கப்பட்டால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நினைத்துப்போலும். கூட்டமைப்பின் தலைவர்கள் கூட அவ்வாறு நினைத்தார்களோ என்னவோ அந்த நிதியத்தை உருவாக்கும்படி  தாங்கள் முண்டுகொடுத்து வந்த அரசாங்கத்திடம் ஒரு போதும் கேட்கவில்லை. முற்றுமுழுதாக எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தாமல் வெறுமனே அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டே கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கின்றது.
ஆகவே, மக்களே  தயவுசெய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் வாக்களியுங்கள்.
எனது வாழ் நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் வழங்கும் இந்த தீர்ப்பு எமது தமிழ் மக்களின் அபிலாiஷகளை வென்றெடுப்பதற்கு எமக்கு வலுச் சேர்ப்பதாக அமையட்டும்! இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும்! உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அமையட்டும்! நீங்கள் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அமையட்டும்! எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்பதை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக் கூறுவதாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.