நடிகை பூர்ணா விவகாரம்: சினிமாவை மிஞ்சிய திகில்…30 பெண்கள்; மொடல் அழகிக்கு நேர்ந்த கதி!
கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம் தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பூர்ணாவின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அவரது பெற்றோரை ஒரு கும்பல் தொடர்பு கொண்டது. அவர்கள் தங்கள் வீடு கோழிக்கோடு என்று கூறியதுடன் மாப்பிள்ளை துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உறவினர் ஒருவர் கூறியதால் அந்தக் கும்பலை பூர்ணாவின் பெற்றோர் நம்பினர். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர்கள் பூர்ணாவைப் பெண் பார்க்க அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களின் கனிவான பேச்சை நம்பி வீட்டுக்கு வர சம்மதித்துள்ளனர். வீட்டுக்கு வந்தபிறகு அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து பூர்ணாவுக்குச் சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் கொடுத்த கோழிக்கோடு முகவரியில் விசாரித்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.
இதற்கிடையில் ஐதராபாத்தில் இருந்த பூர்ணாவின் மொபைல் எண்ணுக்கு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் போன் செய்து துபாயில் உள்ள பிசினஸ்க்காகப் பத்து லட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார். அந்த நபர் மீது சந்தேகமடைந்த பூர்ணா, பெற்றோரிடம் கேட்டுவிட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.
அவசரம் என்பதால் பெற்றோரிடம் கேட்க வேண்டாம் உடனடியாகப் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். சந்தேகம் வலுத்ததால் போன் செய்தது யார் என்று அறிய வீடியோ கால் செய்யும்படி பூர்ணா கூறியுள்ளார். அடுத்த நொடி போனை கட்டாக்கிய அவர் உடனே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். பின்னர் அந்தக் கும்பல் பூர்ணாவின் பெற்றோருக்கு போன் செய்து பணம் தராமல் இருந்தால் பூர்ணாவின் கேரியரை நாசம் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளது.
இதுகுறித்து பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மரட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்தனர். அந்த நான்கு பேரின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானதைப் பார்த்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் நடிகை ஒருவர் இவர்கள் தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து தங்கம் கடத்தலில் எஸ்கார்டாகச் செல்லும்படி சொன்னார்கள். நான் சம்மதிக்காததால் என்னைத் தனி அறையில் அடைத்து வைத்து டார்ச்சர் செய்தனர் எனவும் கூறினார்.
இதையடுத்து அந்தக் கும்பலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பூர்ணாவின் மொபைல் எண்ணை பிளாக் மெயில் கும்பலுக்குக் கொடுத்தது சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஹாரிஸ் எனத் தெரியவந்தது. இந்த வழக்கில் நடிகர் தர்மஜனிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த நடிகர் தர்மஜன் கூறுகையில், ‘லாக்டெளன் சமயத்தில் நான் வீட்டில் இருந்தபோது அஸ்கர் அலி என்பவர் எனக்கு போன் செய்தார். நடிகை பூர்ணா மற்றும் நடிகை மியாவின் மொபைல் எண்கள் வேண்டும் எனவும், ரூ.14 கோடி மதிப்புள்ள தங்கம், மற்றும் கரன்சிகளை கடத்த எஸ்கார்டாக நடிகைகளின் நம்பரை கேட்பதாகவும் அவர் கூறினார். முதலில் அவர் காமெடி செய்கிறார் என நினைத்தேன். தொடர்ந்து அவர் அழைத்ததால் நான் போலீஸில் புகார் அளித்தேன். அதன்பிறகு அவர்கள் அழைக்கவில்லை. இதுபற்றி நடிகை பூர்ணாவிடம் நான் கூறவில்லை. எனக்கும் அந்தக் கும்பலுக்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.
இதுகுறித்து கொச்சி போலீஸார் கூறுகையில், ‘பூர்ணாவின் பெற்றோருக்குத் திருமணம் சம்பந்தமாக பேசுவதற்காக இந்தக் கும்பலை அறிமுகப்படுத்தியது மேக்கப் ஆர்டிஸ்ட் ஹாரிஸ் எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை பூர்ணா மிரட்டப்பட்ட வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரைத் தேடி வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட ஒருவர் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளார். அவர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளார். இந்தக் கும்பல் மீது பூர்ணா புகார் அளித்த பிறகு மேலும் 7 புகார்கள் வந்துள்ளன. முப்பதுக்கும் அதிகமான பெண்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது” என்றனர்.
இதேவேளை, ஆழப்புழா மாடலிங் நடிகையின் வாக்குமூலத்தில்,
“பலரிவத்தத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னை அழைத்து, கொச்சியில் நகை விளம்பரத்திற்கான படப்பிடிப்பு இருப்பதாக கூறினார். நான் அந்த பெண்ணை இரண்டு வருடங்களாக அறிந்திருக்கிறேன். அவர் முன்பு நிகழ்வு மேலாண்மை செய்து கொண்டிருந்தார், பின்னர் மாடலிங் செய்தார்.
நான் அவளை நம்பியதால் படப்பிடிப்புக்கு சென்றேன். அடுத்த நாள் நண்பகலுக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று என்னிடம் கூறப்பட்டது. மார்ச் 3 ஆம் தேதி இரவு 9 மணியளவில் நான் ஸ்கூட்டியில் என் வீட்டை விட்டு வெளியேறினேன். நள்ளிரவில் குண்டன்னூரை அடைந்தேன்.
நான் அவளை அழைத்தபோது, கொச்சிக்கு அல்ல, பாலக்காட்டின் வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று சொன்னாள். மார்ச் 4 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நண்பரின் பைக்கில் வடக்கஞ்சேரியை அடைந்தேன்.
அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை நான் அழைத்தபோது, ஹோட்டல் அறைகளுக்குள் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், ஆண்கள் தடைசெய்யப்பட்டதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே ஹோட்டலில் இருந்து சிறிது தொலைவில் பைக்கை நிறுத்தி, நான் மட்டும் நடந்து சென்றேன்.
ஹோட்டலில், ஒரு அறையில் இரண்டு பெண்களும், மற்றொரு அறையில் நான்கு பெண்ககளும் இருந்தனர்.
இரண்டு பெண்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒன்பது உறுப்பினர்களை கொண்ட கும்பல் இதை செய்தது.
படப்பிடிப்பு பற்றி நான் கேட்டபோது, கும்பல் உறுப்பினரான ரபீக் எங்களிடம் தங்கக் கடத்தல் செய்ய வேண்டும் என்றார்.
நான் வேலையை ஏற்க மாட்டேன், நான் திரும்பி வர விரும்புகிறேன் என்று சொன்னபோது, ஒப்பந்தம் முடிவடையும் வரை நான் வெளியேற மாட்டேன் என்று ரபீக் கூறினார்.
நாங்கள் ஐந்து நாட்கள் ஹோட்டலில் கழித்தோம், ஆனால் எங்களுக்கு ஒரு நாள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது.
ஆறாவது நாளில், நாங்கள் ஆறு பேர் தப்பித்தோம். மார்ச் 11 அன்று நாங்கள் திருச்சூர் அடைந்தோம். அச்சம் காரணமாக பொலிசில் முறையிடவில்லையென தெரிவித்துள்ளார்.