ஜெனீவா தீர்மானத்தின் இலக்குகளை முன்னெடுப்பதில் உறுதியாகவுள்ளோம்- இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா ,ஜேர்மனி,வடமசெடோனியா,மொன்டிநீக்ரோ , ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன.
மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ் பிரதான குழுவின் சார்பில் இந்;த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கை அரசாங்கம் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.
யுத்தத்தின் தீமையான பாரம்பரியங்களிற்கு முடிவை கட்டுவதற்கும் ,இலங்கையில் நிரந்தர சமாதானத்தை பேணுவதற்கும், இலங்கை சர்வதேச சமூகத்துடனான வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த இணைப்பின் அடிப்படையில் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்த எங்களது ஆழ்ந்த கவலையை நாங்கள் மீண்டும் வெளியிடுகின்றோம்
குறிப்பிட்ட தீர்மானத்தின் இலக்குகளான பொறுப்புக்கூறப்படுதல்,நல்லிணக்கம் மற்றும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய சமாதானம் ஆகியவற்றைமுன்னெடுப்பது குறித்து நாங்கள் முழுமையான அர்ப்பணிப்பை கொண்டுள்ளோம்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை மூலம் இந்த கொள்கைகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளதாக தெரிவித்து வரும் அதேவேளை எந்த பொறிமுறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
கடந்த மார்ச்மாதம் முதல் இலங்கை கொவிட் 19 க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தளவிற்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படு;த்தியுள்ளது.
இதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளது போன்று கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வழமைக்கு மாறான நடவடிக்கைகளை மனித உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது.
சிறுபான்மை குழுக்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது,சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை,மோதலின் போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை,பொதுநிர்வாகம் மற்றும் பொதுமுயற்சிகள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தப்பட்டமை குறித்த இலங்கையின் மனித உரிமை அமைப்புகளின் கவலைகளை நாங்கள் பகிர்ந்துகொள்கின்றோம்.
இலங்கையின் ஜனநாயக சூழல் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறுவதாகவும் காணப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கையை கேட்டுக்கொள்கின்றோம்.
கைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தலின் போது உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும்,அவை சர்வதேச மரபுகள் மற்றும் உலகளாவிய உரிமைகளுடன் இணங்கிப்போவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் கடந்தகால வன்முறைகளிற்கும் மற்றும் துஸ்பிரயோகங்களிற்கும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .