November 21, 2024

யுத்தம் நடந்தபோது கஜேந்திரகுமார் எங்கிருந்தார் தெரியுமா? வெளியான தகவல்!

நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் மு.றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கோட்டாபய அரசுடன் இணைந்து வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சொத்துக்களும் ஏராளமான உயிர்களும் இழக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்திலே ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு கூட்டிச் செல்லப்பட்ட போது மனித உரிமை சட்டத்தரணியாக இருந்த தானே ஐந்நூறுகும் மேற்பட்ட இளைஞர்களை காப்பாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கிலாந்தில் சொகுசாக இருந்த கஜேந்திரகுமார் தரப்பினர் தற்போது போலித்தேசியம் பேசி வருகின்றதாகவும் அவர் கூறினார் .

அதோடு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே என அவருடன் இருப்பவர்கள் மேடைகளில் கூறி வருகின்றதாகவும் மு.றெமீடியஸ் தெரிவித்தார்.

எமது போராட்டத்தில் பங்குபற்றாத ஒருவரை அரசியல் பிழைப்புக்காக இவ்வாறு கூறலாமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருப்பவர்கள் தங்களது மனைவிமார் தயாரிக்கும் தேநீருக்கு இனிப்பு குறைவாக இருந்தாலும் அதற்கும் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்றே கூறிக்கொண்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் மக்களுக்குத் தேவையான விடயங்களை பேசி துரித அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும், அவரது கரங்களை பலப்படுத்த இம்முறை எமக்கு அதிக ஆசனங்களை வழங்கி மக்கள் பலமிக்க அணியாக எம்மை பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.