Dezember 3, 2024

சிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்..!!

சிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்..!!

ஹோமகம, பிட்டிபனவில் மீட்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள், பாதாள உலகக்கும்பலினால் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கொஸ்கொட தாரகவின் கீழ் இயங்கும் பாதாள உலகக்குழுவிற்கு சொந்தமானது இந்த துப்பாக்கிகள். அவரின் கீழ் உள்ள ககன (தற்போது சிறையில் உள்ளவர்) என்பவரிடம் இந்த துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை மறைத்து வைக்க, பொட்ட கபிலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகள், அண்மையில்த்தான் அந்த வர்த்தக நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள கஞ்சிபானை இம்ரானை கொல்லும் திட்டத்துடன் இந்த துப்பாக்கிகள் அங்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொஸ்கொட தாரக, கஞ்சிபானை இம்ரான் ஆகியோர் தற்போது பூசா சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆயுதங்கள் மீட்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் 2011 இல் கட்டிடத்தின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் என கூறப்படுகிறது.

இதேவேளை, அதிரடிப்படையின் சோதனை இடம்பெறுவதற்கு முன்னதாக சில துப்பாக்கிகள் இடமாற்றப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. வர்த்தக நிலையத்தின் தற்போதைய உரிமையாளர், மனைவி, எட்டு ஊழியர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இதேவேளை, இராணுவத்தினர் பயன்படுத்தும் இந்த துப்பாக்கிகள் பாதாள உலகக்குழுவிடம் எப்படி கிடைத்தது என்பது பற்றிய விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.