November 24, 2024

ஆஸ்திரேலியாவில் ஏழு ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் அகதிகள்?

Brisbane hotel

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 120 அகதிகள் பிரிஸ்பேன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஹோட்டல் சிறையைப் போல இருப்பதாக கூறும் அகதியான அபேத் அல்சலாஹி, ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் அலுவலகத்திற்கு தொலைப்பேசியில் சில முறைகள் அழைத்து விடுவிக்கக் கோரியிருக்கிறார். அமைச்சர் அலுவலகத்திற்கு அழைப்பதை நிறுத்தமாறு காவல் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் “எனக்கு விடுதலைக் கிடைக்கும் வரை நிறுத்த மாட்டேன்,” எனக் கூறியிருக்கிறார் அல்சலாஹி.
2013 முதல் சிறைவைக்கப்பட்டிருக்கு இவ்வாறான அகதிகள் ஏழு ஆண்டுகளாக மெல்ல மெல்ல சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
“ஏழு ஆண்டுகள் என்பது நீண்டதொரு காலம். நாங்கள் சோர்வுடன் இருக்கிறோம். எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. எங்களால் தூங்க முடியவில்லை. நாங்கள் சோகமாக இருக்கிறேம்,” எனக் கூறியுள்ளார் அல்சலாஹி.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ஹோட்டலின் பால்கனியில் அகதிகள் போராட்டத்தை தொடங்கியதை அடுத்து அவர்களுக்கு ஆதரவு பெருகி தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த சில வாரங்களுக்கு அகதிகளை விடுவிக்கக்கோரி பேரணி உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அத்துடன் அகதிகளை இடமாற்றுவது தடுக்கும் விதமாக ஹோட்டல் அருகே நிரந்தரமாக போராட்டக்காரர்கல் முகாமிட்டு இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரிடம் பேச விரும்புவதாக கூறும் ஈரானிய அகதியான மொராடி, “அவருக்கு தெரியும் நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று, எங்களைப் பற்றி அவருக்கு அனைத்தும் தெரியும்,” எனக் கூறுகிறார். ஆஸ்திரேலிய முகாமில் ஏழு ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறும அவர், தங்களின் சமூக ஊடக கணக்குகள் தொடர்ந்து கண்காணிப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களே, எங்களை விடுவியுங்கள்,” என்ற கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசை நோக்கி வைத்திருக்கிறார் ஈரானிய அகதியான மொராடி.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு மூலம் வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியமர்த்த மாட்டோம் எனக் கூறி வருகிறது.