November 23, 2024

கூட்டமைப்பில் மீளச்சேர்க்க மாவையர் விரும்புபவர்களை தேர்தலில் தோற்கடிக்குமாறு சம்பந்தன் வேண்டுகிறார்!

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தேர்தலின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்போவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறிவருவதும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்களை தோற்கடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மக்களிடம் வேண்டிவருவதும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது. திரிகரணசுத்தி இல்லாதவர்களின் வாய்மையை எவ்வளவு காலந்தான் மக்கள் நம்புவது?

இலங்கை அரசியலில் குள்ளநரி என்று வர்ணிக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கியபோது திடமாக ஒன்றை நம்பினார்.
விகிதாசார வாக்கு முறையின் கீழ் தேர்தலை நடத்தினால் ஐக்கிய தேசிய கட்சியே தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவிருந்தது.
1977ம் ஆண்டு வரையான சகல தேர்தல்களும் தொகுதி அடிப்படையில் நேரடிப் போட்டியாக இருந்தவேளை, அந்தத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்த காலங்களிலும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் அக்கட்சிக்கே கூடிய வாக்குகள் கிடைத்தன.
இதனடிப்படையில் விகிதாசார முறையை அறிமுகப்படுத்தினால் தனது ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து சகல தேர்தல்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுமென அவர் நம்பியதில் தவறில்லை. ஆனால், அவரது எண்ணம் அப்படியே நிறைவேறவில்லை.
அவரைத் தொடர்ந்து 1989ல் பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த எவரும் ஜனாதிபதியாக வரவில்லை.
சந்திரிகா குமாரதுங்க இரு தடவையும், மகிந்த ராஜபக்ச இரு தடவையும், மைத்திரிபால சிறிசேன ஒரு தடவையும் ஜனாதிபதியான பின்னர் கடந்த வருடத் தேர்தலில் கோதபாய அப்பதவிக்கு வந்தார். இவர்கள் எவருமே ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல.
விகிதாசார ரீதியான நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தடவை மட்டுமே (2001 – 2004) ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். 2015இலும் இவர் பிரதமரான போதிலும் சுதந்திரக் கட்சியின் சந்திரிகா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு அங்கிருந்தது.
ஆனால், இந்த விகிதாசார முறை வடக்கு கிழக்கில் எதிர்பாராத சில மாற்றங்களை ஏற்படுத்தியது. முக்கியமாக, 2001ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஒரே தலைமையில் பல தமிழர் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு தொடர்ச்சியானது.
இந்தப் பின்னணியை வைத்து, இப்போது தமிழ் அரசியல் அரங்கில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கும், தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியுள்ள பனிப்போருக்கும், மாற்று அணிகள் களத்தில் இறங்கியுள்ள தேவைகளுக்கும் பொதுமக்கள் பதில் காண வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசு இப்போது மூன்று பிரிவுகளாகியிருப்பது பகிரங்கமான விடயம். என்ன சொல்லியும் இதனை எவராலும் மறைக்க முடியாது. ஏனெனில், முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் இப்போது வாக்கு வேட்டையில் இறங்கி வீதிகளில் நிற்கின்றனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். உதயன் பத்திரிகையின் நிர்வாகி ஈ.சரவணபவன் ஆகியோருடன் புதிதாக களத்தில் இறக்கப்பட்டுள்ள சசிகலா ரவிராஜ் (காலஞ்சென்ற எம்.பி. நடராஜா ரவிராஜின் மனைவி) ஆகிய மூவரும் ஓர் அணியாகப் பார்க்கப்படுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் எதிரும் புதிருமாகவிருந்த எம்.ஏ.சுமந்திரனும், சிவஞானம் சிறீதரனும் ஏதோவொரு கனவான்கள் ஒப்பந்தத்தின் கீழ் இணைந்துள்ளனர். தேர்தலின் பின்னர் மாவையரின் தமிழரசுத் தலைவர் பதவியை இவர்களில் ஒருவர் இலக்கு வைத்திருப்பதாக களநிலை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புளொட் தலைவர் சித்தார்த்தன் தமது தந்தையான காலஞ்சென்ற வி. தர்மலிங்கம் எம்.பி.யின் நிழலில் இம்முறையும் வெற்றிபெறும் உறுதியில் எந்தப்பக்கமும் சாராது, பட்டும் படாததும் போன்ற அறிக்கைகளுடன் தனிஆவர்த்தனம் புரிகிறார்.
வன்னியில் மன்னாரைத் தளமாகக் கொண்ட செல்வம் அடைக்கலநாதனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் கத்தோலிக்க மதபீடத்தின் பலத்துடன் வெற்றிக்குரியவர்களாகவுள்ளனர். இங்கு முன்னர் எம்.பி.யாகவிருந்த மற்றிருவர் தமக்குள் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பில் வடக்குப் போன்ற உள்வீட்டு மோதல் நிலைமை பெரிதளவில் காணப்படவில்லை. எனினும், இங்கு மூவரும், திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருமாக கிழக்கில் மொத்தம் ஐவர் கூட்டமைப்பில் வெல்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட ஏழு இடங்களில் கூட்டமைப்புக்கு ஆகக்கூடியதாக நான்கு இடங்களே (சிலவேளை மூன்றாகவும் குறையலாம்) கிடைக்குமென்றும், வன்னியில் ஆறு இடங்களில் கூட்டமைப்புக்கு மூன்றே சாத்தியமென்றும் இப்போதைய நிலைவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் தேர்தல் நடைபெறுமானால் வடக்கிலும் கிழக்கிலும் கூட்டமைப்புக்கு ஆகக்கூடியதாக பதினொரு ஆசனங்களே கிடைக்குமென அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதத்துக்கு மேலாக இருப்பதால், இந்த எண்ணிக்கை முன்னுக்குப் பின்னாக மாறக்கூடும். அதனைப் பொறுத்தே தேசியப் பட்டியல் எண்ணிக்கை தெரியவரும். இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரண்டு விடயங்களை மீளமீள முன்னிலைப்படுத்தி வருகிறார்.
‚தமிழ் மக்களின் அரசியல் தலைமை கூட்டமைப்பு மட்டுமே. அப்படியிருக்க மற்றைய தமிழ் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் எதற்காக கூட்டமைப்பை விமர்சிப்பதையே தங்கள் பிரதான தொழிலாகக் கொள்ள வேண்டும்? கூட்டமைப்பைப் பார்த்து கேள்வி கேட்பதுதான் இவர்கள் வேலையா? தமிழ் மக்களுக்கு இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள்?“ என்பது இவர் தொடர்ந்து அடுக்கி வரும் கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் என்பது சம்பந்தனுக்குத் தெரியாததல்ல.
தமிழர் தாயகத்திலிருந்து மொத்த அடிப்படையில் ஒரே அணியாக கடந்த இரண்டு தசாப்தங்களாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள் கூட்டமைப்பினரே.
எங்கிருந்தோ அரூபமாகக் காட்டப்பட்ட ஒரு விரலின் அசைவுக்கிணங்க, தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை அள்ளிப்போட்டு கூட்டமைப்பினரையே தங்கள் ஏகபிரதிநிதிகளாகத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பினார்கள்.
அவ்வாறு தெரிவாகி ஒரே அணியாக வென்றவர்கள் இதுவரை தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் உட்பட முக்கிய விடயங்களில் என்ன செய்தார்கள் என்று கேட்பதும், ஏன் சிலவற்றைச் செய்யவில்லை என்று கேட்பதும் தவறா? வெற்றி பெற்றவர்களை விடுத்து தோற்றுப் போனவர்களிடமா இதனைக் கேட்க முடியும்?
என்ன கேட்கிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து, யார் இதனைச் செய்கிறார்கள் என்று பார்ப்பதும் – அவர்களை நோக்கி தவறான முறையில் விமர்சிப்பதும் ஏற்புடையதல்ல.
பழுத்த அரசியல்வாதியென்று மகுடம் சூட்டப்படும் சம்பந்தன், பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது அவர்களிடம் பதில்கேள்வி கேட்கக்கூடாது, கோபப்படவும் கூடாது.
இல்லை, இப்படித்தான் கூறுவேன் என்று அடம்பிடிப்பாரானால், அவர் நம்பிக்கையுடன் கூறும் இருபது ஆசனங்களை கூட்டமைப்பினால் எவ்வாறு பெறமுடியும்? இந்த இலக்கு பகற்கனவு என்று தெரிந்து கொண்டும் பழக்கதோ~ம்போல வழக்கமான நம்பிக்கை அடிப்படையில் இதனைக் கூறக்கூடாது.
கூட்டமைப்பின் தற்போதைய பரப்புரைக் களத்தில் மாவை சேனாதிராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கும் ஒரு விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டமைப்பிலிருந்து முன்னர் வெளியேறியவர்களை தேர்தல் முடிந்த பின்னர் மீள இணைத்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இதனை அவர் திரிகரணசுத்தியுடன் சொன்னாரா, அல்லது வழக்கமான ‚மீண்டும் போர் வெடிக்கும்“ என்று மக்களை உசுப்பிவிடும் பாணியில் கூறினாரா என்பது அவருக்குத்தான் தெரியும்.
கூட்டமைப்பு என்பது எல்லோரையும் கூட்டி இணைத்ததாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையில் அவர் கூறியிருப்பாரென்பது உண்மையானால், சில முக்கிய விடயங்களை இங்கு அணுக வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உட்பட எவரையும் தாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றவில்லையென்றும், அவர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பது தமக்குத் தெரியாது என்றும் சம்பந்தன் அண்மையில் கூறியிருந்தார். துர்அதிர்~டமாக கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியிருப்பது தமக்குக் கவலையளிப்பதாக (காலங்கடந்த ஞானம்) மாவையர் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
தர்க்கரீதியில் இவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உண்மை அதுவல்ல. கூட்டமைப்பு தேர்தல் கொள்கைகளைக் கைவிட்டதாலும், ஒரு சிலரின் விருப்பப்படியே அங்கு முடிவுகள் எடுக்கப்பட்டதாலும் அவர்கள் கூட்டமைப்புக்குள் இருக்க முடியாதவாறு தாங்கள் தாங்களாகவே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே யதார்த்தம்.
இதனை மாற்று அணியின் தலைவர்களும் மற்றையோரும் பல தடவை பொதுவெளிகளில் பேச்சுகள், அறிக்கைகள், நேர்காணல்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். அவ்வேளை அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கத் தவறிவிட்டு இப்போது மீள இணைக்கப் போவதாகக் கூறுவது தேர்தல் கால யுக்தியா?
பிரிந்தவர்களை மீள இணைக்க வேண்டுமென மனதார மாவையரோ அல்லது அவருடன் உள்ளவர்களோ விரும்பினால், எதற்காக தேர்தல் முடியும்வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? இவ்விடயத்தில் மாவையரின் விருப்பத்தில் இரு வேறு பார்வைகள் உண்டு.
முதலாவது – மாற்று அணிகளைச் சேர்ந்தவர்களில் ஒருவர் அல்லது இருவர் வெற்றிபெறும் சாத்தியம் காணப்படுவதால், அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் அவர்களை இழுத்து கூட்டமைப்புடன் இணைத்து அரசியல் பணிகளை மேற்கொள்வது.
இரண்டாவது – மாற்று அணிகளை முழுமையாகத் தோற்கடித்து, அவற்றின் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, பின்வரிசையினரை மீண்டும் கூட்டமைப்புக்குள் சேர்த்து அவர்களை செல்லாக்காசாக்குவது.
எதுவானாலும் அவர்களை கூட்டமைப்பு சேர்க்க வேண்டுமென உளமார விரும்புகிறது என்றால் தேர்தலுக்கு முன்னர் அதனைச் செய்து, அனைவரும் ஒன்றாகப் போட்டியிட்டு கூடிய ஆசனங்களில் வெற்றிபெற முடியுமென்பது அரசியலில் கைக்குழந்தைக்கும் தெரியும். முக்கியமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழு ஆசனங்களையும் இலகுவாகப் பெறக்கூடியதாகவுமிருக்கும்.
மாற்று அணிகளை இணைத்துக் கொண்டு ஒன்றாகப் போட்டியிட்டால் சிலவேளை வடக்கு கிழக்கில் சம்பந்தன் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் இருபது ஆசனங்களை (தேசியப் பட்டியல் உட்பட) பெறமுடியும்.
இல்லையேல், சம்பந்தனின் இருபது என்பது வெறும் நம்பிக்கையாகவே போய்விடும். மாவையரின் தேர்தலுக்குப் பின்னைய ஒற்றுமை என்பதும் “மீண்டும் போர் வெடிக்கும்“  என்ற ஒலிபெருக்கிச் சத்தமாகவே மாறிவிடும்.