மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினம் :இன்று 25!
மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினமான இன்று அவரது நண்பரும் அவருடன் இணைந்து செயற்பட்டவருமான மனோகணேசன் தனது மனவோட்டத்தை பதிவிட்டுள்ளார்.
நண்பன் ரவிராஜ் உயிருடன் இல்லையே என திடீர் திடீரென நான் நினைத்துக்கொள்வேன்.
ரவி சுட்டுகொல்லப்பட்ட அந்த 2006 நவம்பர் ஒன்பதாம் திகதி, என் மனதில் எப்பொழுதும் இன்று காலையில் நடந்தது போல பதிந்திருக்கிறது.
காலையில் செய்தி கேட்டவுடன், தொலைபேசியில் அவரது வீட்டு பணிப்பெண் அழுது குழறிய, சில நிமிடங்களிலேயே, அடித்து பிடித்துகொண்டு, கொழும்பு பொது மருத்துமனைக்கு ஓடோடி சென்றேன். அங்கு அப்போது ஒருவரும் இருக்கவில்லை.
என்னைக்கண்ட மருத்துவமனை பிரதம அத்தியட்சகர் என்னை அழைத்து சென்று ஒரு அறையில் கைகாட்டி விட்டார். அங்கே ஒரு பலகை கட்டிலின் மீது என் நண்பன் ரவி படுத்து இருந்தார்.
„என்ன, இங்கே? அதிதீவிர சிகிச்சை பிரிவில் இல்லையா?“ என்று பதைபதைப்புடன் நாக்குழற நான் கேட்ட போது, „இல்லை, ஹொனரபல் கணேசன், ஹொனரபல் ரவிராஜ் இறந்துவிட்டார்“ என்று அத்தியட்சகர் அமைதியாக சொன்னார்.
மின்னல் தாக்கியது போல் இருந்தது. அருகில் சென்று தொட்டு பார்த்தபோது உடலில் சூடு அப்படியே இருந்தது. முகத்தில் ரவியின் வழமையான அந்த மர்ம புன்னகையும் தெரிந்தது. நான் சற்று குனிந்து துப்பாக்கி சூட்டினால் இரத்தம் வடிந்திருக்குமா, காயம் பட்டிருக்குமா என தேடினேன். அப்படியெதுவும் அங்கே தெரியவில்லை. இரத்தமும் இருக்கவில்லை. ஒருவேளை இரத்தத்தை துடைத்துவிட்டார்களோ தெரியவில்லை.
நான் கேட்காமலே, நான் என்ன பார்க்கிறேன் என்பதை உணர்ந்து, அத்தியட்சகர் என் பக்கத்தில் வந்து, ரவியின் தலையில் இடது புறம் என நினைக்கிறேன், இருந்த சிறிய ஒரு புள்ளியை காட்டினார். துப்பாக்கி சன்னம் இதில் தான் நுழைந்துள்ளது என்று சொன்னார்.
வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒருவித வெறுமை உணர்வுடன் நான் வெளியில் வந்தபோது, அப்போதுதான் ஊடகவியலாளர்களும், தொடர்ந்து அலறலுடன் ரவியின் தாய், மனைவி, மகள், வேறு பல அரசியல்வாதிகள் வர தொடங்கினார்கள்.
எனக்கு சட்டென ஒரு உண்மை உறைத்தது.
ஒரு அரசியல் தலைவர், அவர் வாழ்நாளில், மக்களுக்காக வாழ்ந்து, மக்கள் சார்பில் குரல் எழுப்பி, போராடி, மக்களுக்காக உயிர் இழக்கிறார். அதன் பின்தான், வாழ்நாளில் அந்த மாமனிதரை முழுமையாக உணர்ந்திருக்காத அரசியலர், சமூக, முன்னோடிகள், பாமரர்கள் உள்ளிட்ட பெருந்திரளினர் என அனைவரும் அந்த இழப்பை முழுமையாக உணருகிறார்கள். அதுவும் அந்த மரணம் இப்படி கொடுமையாக நிகழும் போது, அது தாங்க முடியாததாக மாறுகிறது.
ரவியின் வாழ்வும் இப்படிதான். அவரின் மறைவுக்கு பிறகு மறைந்த தலைவருக்கு அஞ்சலி கூட்டங்கள் நடத்தி, இறப்புக்கு பின்னரான பட்டங்கள் வழங்கி, இனம் வருந்தி வணங்குகிறது. யாரையும் குறை சொள்ளவதற்கில்லை. இதுதான் உலக இயல்பு.
ஆனால், அந்த இறப்பு நேரடியாக அவரது குடும்பத்தால்தான் உணரப்படுகிறது. அன்று அங்கே கொழும்பு பொது மருத்துமனை வாசலில், ரவியின் மனைவியும், மகளும், தாயும் கதறி அழுததை பார்க்கும் போது, மனது ரொம்பவும் வெறுமையாகியது.
தாய் என் கையை பிடித்துகொண்டு கதறிய படம் ஊடகங்களில் வெளியாகி தமிழர் மற்றும் ரவியை மதித்த சிங்கள நண்பர்களின் மனங்களை உருக்கியது. ரவியின் மகள் எனது ஞாபகத்தின்படி, ஒரு சிறுமியாக பாடசாலை சீருடையில் பாடசாலையில் இருந்து அப்படியே அழைத்து வரப்பட்டார் என எண்ணுகிறேன்.
இன்று, திருமதி. சசிகலா ரவிராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார் என நினைக்கிறேன். அன்று அவர் அரசியல்வாதி இல்லை. அவர் அன்று அரசியலை நினைத்துக்கூட பார்த்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை. ஒரு கல்லூரி ஆசிரியராகவும், வீட்டு மனையாளாகவுமே இருந்தார் என நினைக்கிறேன். அன்றைய தினம் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். அவர் முகத்தை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
பிறகு ஒரு பெரும் இறுதி ஊர்வலத்தையும், அஞ்சலி கூட்டம் ஒன்றை விஹாரமகாதேவி பூங்காவிலும் நான், ராஜித உள்ளிட்டோர் நடத்தினோம். அதற்கும் அரசாங்கம் பொலிஸ் ரூபத்தில் பல தடங்கல்களை போட்டது. இப்போது சிக்கலில் மாட்டி இருக்கும் பூஜித ஜயசுந்தரதான் கொழும்பு டிஐஜியாக இருந்தார். சண்டை போட்டு, போட்டு, நிகழ்வை நடத்தினோம். தமிழர்களை விட, சிங்களவர்கள்தான் அதிகம் வந்திருந்தார்கள். அது ஒரு தனி அத்தியாயம்.
நான் யாழ்ப்பாணத்தில் பிறக்கவில்லை. ரவி கொழும்பில் பிறக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் பதவிகளை கொண்டு வரும் தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் மிக நெருங்கிய நண்பர்கள். அதனால்தான், சுகமான அரசியல் செய்யும் இன்றைய நாட்களை போன்று அல்லாத, அந்த நெருக்கடியான நாட்களில் மரணம் தேடி வரும் என்று தெரிந்திருந்தும் நாம் இருவரும் “மக்கள் கண்காணிப்பு குழுவை” அமைத்து, தேர்தல் அரசியலுக்கு அப்பால், மனித உரிமை பாதையில் வெகுதூரம் சென்றோம்.
ரவி இறந்தபிறகு, யுத்தமும் முடிந்த பிறகு சில வருடங்களுக்கு நவம்பரின் ரவி கொல்லப்பட்ட தினத்தில் நான் ரவியின் நினைவாக கூட்டங்கள் நடத்தி வந்தேன். அந்த நினைவு கூட்டங்களில் நானும், ரவியை அறிந்த சிலரும் உரையாற்றுவோம். சில வருடங்களுக்கு பிறகு அந்த நினைவு கூட்டங்களை நடத்துவதை விட்டுவிட்டேன். அந்த கூட்டங்கள் மிகவும் சம்பிரதாயபூர்வமான அரசியல் கூட்டங்களாக மாறின.
இறந்துபோன ஒரு அரசியல் தலைவரது ஞாபகார்த்த கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும். ஆகவே இந்த அரசியல் சம்பிரதாயங்களில் எந்த தவறும் கிடையாது. ஆனால் எனக்கு ரவியை பற்றி பேசும்பொழுதெல்லாம் மருத்துவமனையின் பிண அறையில் ஒரு மேசையின் மீது கிடத்தப்பட்டிருந்த ரவியின் உடலும், அந்த உடல் சூடும், அந்த முகத்தில் இருந்த மர்ம புன்னகையும், துப்பாக்கி தோட்டா துளைத்த அவரின் தலையில் இருந்த சிறு புள்ளியும் தான் ஞாபகத்திற்கு வரும். ஆகவே சம்பிரதாய கூட்டங்களில், குறிப்பாக ரவிராஜ் தொடர்பான கூட்டத்தில் எனக்கு இயல்பாக கலந்துகொள்ள முடியாமல் போனது.
மக்கள் கண்காணிப்பு குழுவை நடத்திக்கொண்டிருந்த பொழுது இத்தகைய கொலை முயற்சி எங்கள் மீது பல சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கப்பட இருந்தமை எனக்கு தெரியும். ஒருமுறை நானும், ரவியும் களுத்துறையில் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த யுத்த எதிர்ப்பு கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்கு கொழும்பில் இருந்து சென்றோம். ரவி அப்பொழுது தான் புதிதாக ஒரு ஜீப் வண்டி வாங்கி இருந்தார். புது மெருகுடன் அந்த வண்டி இருந்தது. கொழும்பில் இருந்து புறப்பட்ட பொழுது அவர் கேட்டுக்கொண்டதால், நான் அவர் வண்டியில் ஏறிக்கொண்டேன். பின்னால் வந்த எனது வண்டியிலே எனது பாதுகாப்பு அதிகாரிகளும், ரவியின் அதிகாரிகளும் ஏறிக்கொண்டார்கள்.
நானும், ரவியும் தனியாக அவரது வண்டியிலே சென்றோம். ரவி தான் ஓட்டினார். களுத்துறை நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, விக்கிரமபாகு கருணாரத்னவும், மக்கள் கண்காணிப்பு குழுவின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் எங்களுக்கு முன்னரே சென்றிருந்தார்கள்.
களுத்துறையை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது பிரியாணியிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கூட்டம் நடைபெறவிருந்த அந்த மண்டபத்தின் மேடையிலே திரை சீலைக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு நபரை ராஜித சேனாரத்னவின் பாதுகாப்பு அலுவலர்கள் பிடித்து விசாரிப்பதாகவும், அந்த நபருக்கும் கூட்டத்திற்கும் தொடர்பில்லை என தகவல் வெளியாகி இருப்பதாகவும் பிரியாணி சொன்னார்.
அதற்குள் எங்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த எனது வண்டி வேகமாக எங்களை கடந்து வந்து முன்னாள் நின்றது. அதிலிருந்து எனது பாதுகாப்பு அதிகாரி வேகமாக ஓடி வந்தார்.
„சார், களுத்துறை மண்டபத்திலே ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சந்தேக நபர் ஒருவரை பிடித்திருக்கிறார்கள்“ என்று சொன்னார்.
„ஆம். அது எனக்கு தெரியும்.“ என்று சொன்னேன்..
„சார், நாங்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தால் என்ன?“ என்று அவர் கேட்டார்.
அதற்கு நானும், ரவியும் உடன்படவில்லை.
உடனே எனது வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகளை நான் பயணித்த ரவியின் வாகனத்தில் ஏற்றிவிட்டு „நீங்கள் மெதுவாக வாருங்கள். நாங்கள் வேகமாக சென்று அந்த மண்டபத்தை பரிசோதிக்கிறோம், என்று கூறிவிட்டு முன்னாள் இருந்த எனது வாகனத்திலேயே வேகமாக அவர்கள் சென்றுவிட்டார்கள்.
நானும், ரவியும், ரவியின் வாகனத்தில் இரண்டு அதிகாரிகளுடன் மெதுவாக சென்றோம். சிறிது நேரத்தில் பிரியாணியிடம் இருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. பிடிபட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும், அவரை களுத்தரை போலீஸ் அலுவலர்கள் வந்து கைதுசெய்து கொண்டு சென்று விட்டதாகவும் கூறினார். மேலும் கூட்டத்திற்கு வந்திருந்த சனத்தில் பாதிப்பேர் பதட்டத்திலே சென்றுவிட்டதாகவும், ஒரு சிலரே இருப்பதாகவும், ஆனால் கூட்டத்தை கட்டாயம் நடத்தியே தீரவேண்டும் என ராஜிதவும், விக்ரமபாகுவும் சொல்வதாகவும் பிரியாணி சொன்னார்.
கூட்டத்தை நடத்துவோம், நாங்களும் வருகின்றோம் என சொன்னேன்.
பிறகு கூட்டம் நடந்தது. நாங்கள் எல்லோரும் பேசினோம். கூட்டம் முடிவடைந்த பின் நாங்கள் களுத்துறை போலீஸ் நிலையத்திற்கு செல்ல தீர்மானித்து, ராஜிதவின் அதிகாரிகள் களுத்துறை போலீசுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாக அந்த சந்தேக நபரை போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பிவிட்டதாக கூறினர். ஆகவே நாங்கள் களுத்துறை போலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை.
அன்று கைதுசெய்யப்பட்ட அந்த சந்தேக நபர் பற்றி அதற்கு பிறகு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. அவரை பற்றிய பதிவுகளும் இல்லாமல் போய்விட்டன. அங்கே எம்மில் எவரோ கொலைசெய்யப்படுவதற்கு நடந்த முயற்சி என நாம் ஊகித்துக்கொண்டோம். அவ்வளவுதான்.
அன்று நானும், ரவியும் பயணித்த ரவிராஜின் அந்த புதிய வாகனத்தில் தான் நாரஹேன்பிட்ட எல்விட்டிகல மாவத்தை, அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் சில தினங்களுக்கு பிறகு ரவிராஜ் சுட்டு கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட போதும் கூட அவரது வாகனத்தை அவர் தான் ஒட்டிக்கொண்டு இருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது சிங்கள பொலிஸ் அதிகாரி ஒருவரும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், பொதுவாக சொல்லப்படுவதை போல, அரசு பயங்கரவாதம் என்பது ஒட்டு மொத்த படைத்தரப்பையும் முழுமையாக தழுவியது அல்ல. ஆங்காங்கே சில கொலை குழுக்களை, கடத்தல் குழுக்களை, சித்திரவதை குழுக்களை அரசியல் தலைமை தமது தேவைகளுக்காக அமைத்து பயன்படுத்தியது.
இத்தகைய தந்திரமான அரச பயங்கரவாத சூழல் பற்றி அவ்வேளையில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நான், ரவி, ராஜித, விக்கிரமபாகு, சிறிதுங்க, பிரியாணி ஆகியோர் அறிந்து தான் இருந்தோம். ஆகவே எங்கள் போராட்ட பணிகளை நிறுத்தாமல் நடத்தினாலும் கூட எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.
ஆனால் ரவி எச்சரிக்கையாக இருப்பதில் சிரத்தை காட்டவில்லை என்பதை நான் அறிந்தே இருந்தோம். கொழும்பு ஹவ்லொக் வீதியில் பயணிப்பவர்களுக்கு பார்க் ரோட் சந்தியை ஒட்டி அமைந்திருந்த சிறுவர் பூங்காவும், விளையாட்டு கழக திடலும் அமைந்திருக்கும் பிரதேசம் நன்கு தெரிந்திருக்கும். அங்கே ஹவ்லொக் வீதியை ஒட்டி நடைபாதை ஓரமாக இன்னொரு சிறிய சமாந்திர வீதியும் இருக்கும். அந்த இடத்திலே பாரம்பரியமாக ஒரு சிங்கள வியாபாரி கொழும்பு புறநகர் கிராமத்தில் இருந்து வந்து செவ்விளநீர் விற்றுக்கொண்டு இருப்பார்.
இந்த மாதிரி அச்சுறுத்தல் நிரம்பிய காலகட்டத்திலே ஒரு நாள் நான் எனது பாமன்கடை வீட்டில் இருந்து ஹவ்லொக் வீதியிலே வேகமாக வண்டியிலே சென்ற பொழுது, அந்த இளநீர் விற்பவருக்கு பக்கத்திலே வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி ரவிராஜும், அவரது காவலர்களும் இளநீர் அருந்தியபடி சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டேன்.
உடனடியாக எனது வாகனத்தை திருப்பி அந்த இடத்திற்கு போகும்படி எனது சாரதியிடம் கூறினேன். எனது வாகனம் யூ டர்ன் அடித்து வேகமாக வந்து ரவியின் வாகனத்திற்கு பின் நின்றது. நானும் எனது காவலர்களும் வருவதை கண்ட இளநீர் காரர் தனக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கிறார்கள் என சந்தோசப்பட்டு எங்களை பார்த்தார்.
அங்கே சென்ற நான் ரவியை கடுமையாக கண்டித்தேன். இப்படியான பகிரங்க இடங்களில் தனியாக நிற்க வேண்டாம் என சொன்னேன். தாங்கள் பாதுகாக்க வேண்டிய வீஐபீயை பகிரங்க தெருவோரத்தில் நிறுத்தி சாவகாசமாக இளநீர் குடித்துக்கொண்டிருந்த ரவியின் பாதுகாப்பு அதிகாரிகளையும் நான் கடுமையாக திட்டினேன். உங்களுக்கு மூளை இல்லையா? என நான் சிங்களத்தில் கேட்டது ஞாபகம் இருக்கிறது.
எனது பாதுகாப்பு அதிகாரி போலீஸ் தராதரத்தில் அவர்களை விட உயர் அதிகாரி. அவரும் ரவியின் பாதுகாவலர்களை கடுமையாக திட்டினார்.
இளநீரை குடித்தது குடித்தபடி அப்படியே விட்டுவிட்டு, ரவியையும் அவரது பாதுகாவலர்களையும் அங்கிருந்து வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நான் போனேன். இந்த சம்பவம் எனக்கு நன்கு ஞாபகம் இருக்கின்றது.
இந்த சம்பவமும், களுத்துறை சம்பவமும் நிகழ்ந்த சில நாட்களுக்கு பிறகுதான் ரவியின் ஏற்பாட்டில் டீஎன்ஏ எம்பிக்கள் கொழும்பு ஐநா வளாகத்திற்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதை அடுத்துத்தான் ரவி கொல்லப்பட்டார்.
உலக சமுதாயத்தின் கொழும்பு முகவரியான ஐநா அலுவலக வாசலில் நின்று, ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும், ஒரு ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் ஜனநாயக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அதற்கடுத்த நாள் அதில் ஒரு எம்பி சுட்டுக்கொல்லப்படுகிறார். இதுபற்றி ஐநா ஒன்றும் பெரிதாக ஆர்ப்பரிக்கவில்லை. இதன் பிறகு எனக்கு சர்வதேச சமூகம் பற்றிய நம்பிக்கை குறைய தொடங்கியது என மனோகணேசன் தெரிவித்தார்..