தமிழரசு: நடப்பதென்ன?
இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளே நடந்துவரும் குழறுபடிகள்,மாவைக்கு எதிரான சதிகள்,சிறீதரனின்; சுமந்திரனின் மீதான திடீர் பாசம் என்பவை குறித்து குடாநாட்டின் பிரபல பத்தி எழுத்தாளர் ஒருவர் பதிவு செய்துள்ள கட்டுரை உண்மைகளை சொல்கின்றது.
பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக்கட்சியின் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நியமிப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழரசுக்கட்சியின் தலைமை பதவியில் சிறீதரன் அமரவேண்டுமாயின் அதற்கு பரிகாரமாக தனது செல்வாக்கு ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விருப்புவாக்கால் வெல்ல வைக்கவேண்டும் என டீல் பேசப்பட்டு சுமந்திரனின் வெற்றிக்காக தற்போது சிறீதரன் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.
அதேவேளை தற்போது தலைமைப் பதவியில் இருக்கும் மாவை சேனாதிராஜாவை கடந்த தடைவை கிளிநொச்சியில் கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்காலேயே வெற்றிபெற்றிருந்த நிலையில் இம் முறை பொது தேர்தலில் சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு மட்டுமே கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ்.மாவட்டத்தில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளமை மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பின்னடைவாகவே நோக்கப்படுகின்றது.
சிறீதரன் தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவியில் அமரவேண்டுமாயின் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்படவேண்டும். மாவை சேனாதிராஜாவை பொறுத்தவரையில் வலி.வடக்கில் பெரும்பான்மையான வாக்குகளை பெறமுடியுமாயினும் வலி.வடக்கு, வலி.தெற்கு, வலி.கிழக்கு மற்றும் வலி.தென்மேற்கு பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கடும் செல்வாக்கோடு காணப்படுகின்றமை பெரும் பின்னடைவே.
இந்நிலையில் சிறீதரன் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவான பிரசாரத்தை முடக்கிவிட்டால் தனது வெற்றியை உறுதிசெய்வது மட்டுமன்றி மாவை சேனாதிராஜாவை தோற்கடிக்க முடியும் என சுமந்திரன் தரப்பினர் திடமாக நம்புகின்றனர்.
இதற்கப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை களமிறக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் சசிகலா தமிழ் மக்களின் அனுதாப வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என்ற நிலையில் அதனை தடுப்பதற்கான உக்திகளும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரால் கடுமையாக முன்னெடுக்கப்படினும் தற்போது சுதாகரித்துக்கொண்ட சசிகலா ரவிராஜ் தனித்துப் பிரசாரத்தை முன்னெடுப்பதாக தெரியவருகின்றது.
தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடும் அருந்தவபாலனின் வாக்குகளை சிதறடிப்பதை நோக்காக கொண்டு களமிறக்கபட்ட ரவிராஜ் சசிகலா தற்போது தனது வெற்றியினை தடுப்பதற்கான சூழ்சிகளை அறிந்து தனிவழியில் சென்றிருப்பதால் தமிழரசுக்கட்சியினர் அதிர்ந்து போயிருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதற்கு தற்போது பல தமிழ் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதே பிரதான காரணம். கடந்த தடவையினை விட இம்முறை கடும் சவாலாக பொதுத் தேர்தல் அமையப்போவதை உணர்ந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் விருப்புவாக்கில் ஒருவருக்கு ஒருவர் குழிபறிப்பில் ஈடுபட இப்போதே ஆரம்பித்து விட்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை பொறுத்த வரையில் கடந்த தேர்தலில் 72,000 வரையான விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதும் அவற்றில் 60 வீதமான வாக்குகள் யாழ்.மாவட்டத்திலும் 40 வீதமான வாக்குகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிடைத்திருந்தன. இம்முறையும் அவ்வாறு வாக்குகள் கிடைக்குமா? என்பதில் பல சந்தேகங்கள் நிலவுகின்றன. ஏன் ஏனில், யாழ்.மாவட்ட மக்களுக்கான குடிநீரை இரணைமடுவில் இருந்து வழங்க விடாது தடுத்ததில் வெளிப்படையாகச் செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.
கடந்த ரணில் தலைமையிலான அரசிடமிருந்து அபிவிருத்திக்கென 2 கோடி பெற்றநிலையில் அதனை மறுத்திருந்தமையும் ஆர்.ரி.ஐ மூலம் அது பகிரங்கப்படுத்தப்பட்டமை. கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வதும் பின்னர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வரவு செலவுத்திட்டம் முதல் பல செயற்றிட்டங்களுக்கு ஆதரவளித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவரது செல்வாக்கை கணிசமானளவு குறைத்திருக்கின்றன என்ற கருத்தும் நிலவுகின்றன.
இதற்கப்பால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான வெற்றிபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருப்பது சிறீதரனுக்கு பெரும் சவாலாகமாறியிருக்கின்றது.
இதற்கப்பால் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தனது பதவிக்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களால் மக்கள் செல்வாக்கினை பெற்றிருப்பதால் தீவகத்திலும் கடந்த முறைபோன்று இம்முறை விருப்பு வாக்கை பெறுவதில் கடினமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டே தற்போது புலிப்புராணம் பாட முயற்சிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.