November 22, 2024

நாட்டின் எந்த பகுதியையும் யாரும் உரிமை கோர முடியாது; மஹிந்த……

நாட்டில் இந்த மாகாணம் எங்களுடையது, இந்த தாயகம் எங்களுடையது என கூறி யாரும் இந்த நாட்டை மீண்டும் துண்டாக்க முயற்சித்தால் அது நிறைவேறாத விடயம் என்பதை நான் நினைவுபடுத்துகிறேன் என தமிழ் மக்களை எச்சரித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

அத்தோடு இது அனைவரின் நாடாகும். யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் தெற்கில் பிறந்தாலும் இந்த நாடு சொந்தமாகும். இந்த இடம் ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமானது, ஏனையோர் சமூகமளிக்க முடியாதென கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
குரநாகல் தலவத்தகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக ஐ.தே.கவினரும், சு.கவின் ஒரு தரப்பினரும் இணைந்தே ஆட்சியமைத்தனர். 2015ஆம் ஆண்டு என்னைதோற்கடித்து, முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் பொதுத்தெர்தலில் 96 ஆசனங்களை பெற்றோம். அப்போது நாங்கள் வெற்றிபெறக்கூடிய நிலைமையிிருந்தாலும், சில காரணங்களால் அது முடியவில்லை.

அதன் பின்னர் எமது ஒரு தரப்பினர் அரசுடன் இணைந்து கொள்ள, மற்றொரு தரப்பு எதிர்க்கட்சிக்கு வந்தது. அதன் பின்னரே புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டுமென தீர்மானித்து அந்த பொறுப்பை பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்தோம். அதன் பின்னர் நடந்த பிரதேசசபை தேர்தலில் மொட்டு சின்னம் பெரு வெற்றியீட்டியது.

அதன் பின்னர் மாகாணசபை தேர்தல் நடந்திருக்க வேண்டும்.ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது. ஐ.தே.கவிற்கு எப்பொழுதும் தேர்தலிற்கு பயம். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதும், நான்கரை வருடத்திற்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமல் போனது. இப்பொழுது தேர்தல் வருகிறது. ஜனாதிபதியை பலப்படுத்தவும், சட்டதிட்டங்களை உருவாக்கவும் பலமான நாடாளுமன்றம் அவசியம். ஜனாதிபதி ஒரு பக்கமும், நாடாளுமன்றம் இன்னொரு பக்கமும் பயணித்தால், முன்னோக்கி நகர முடியாது.

ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கிவேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்றால்,ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்ற அதிகாரத்தை வழங்க வேண்டும்.

சிலர் தங்களுக்கான தாயகம் முக்கியமென கூறுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சொந்தமான தாயகமே இலங்கை. ஆகவே இலங்கையை துண்டாக்க அனுமதிக்க முடியாது. இந்த மாகாணம் எங்களுடயது, இந்த இடம் எங்களுடையதென கூறி யாரும் இந்த நாட்டை துண்டாட முயற்சித்தால் அது தவறானதென்பதை நினைவுபடுத்துகிறேன்.

இது அனைவரிற்கும் சொந்தமான நாடாகும். யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும், தெற்கில் பிறந்தாலும் இந்த பூமி அனைவருக்கும் சொந்தமாகும். இலங்கையில் எந்தவொரு பகுதியில் சென்று வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமையுள்ளது. இந்த இடம் ஒரு சிலருக்கே சொந்தம், ஏனையோர் சமூகமளிக்க முடியாதென கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றார்.