முகமாலை:இராணுவ நீக்கத்தை வலியுறுத்துகிறது?
முகமாலைப் பகுதியில் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக்கு வைத்தே படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
பளை கெற்பேலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் என்ற 24 வயது இளைஞன் நேற்று மாலை 6.15 மணியளவில் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானார்.
முகமாலை இராணுவ முகாமுக்குப் பின்புறமாக சட்டத்திற்குப் புறம்பாக மணல் அகழ்வில் நான்கு பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொலிஸாரின் நடமாட்டத்தை உளவு பார்க்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டதாக இராணுவம் கூறுகின்றது.
உளவு பார்ப்பவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியில் நடமாடுவதை அறிந்த இராணுவத்தினர் அவரை மறிக்க முற்பட்டனர்.
எனினும் அவர் இராணுவத்தினரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மோதுண்டு நிலத்தில் வீழ்ந்த இராணுவச் சிப்பாய், இளைஞன் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார். இதன்போதே குறித்த இளைஞன் உயிரிழந்தார் என்று படையினர் கூறியதாக பளை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டிருந்தால் குறித்த இளைஞனைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து மோட்டார் சைக்கிளால் இராணுவச் சிப்பாயை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டவரை சட்டப்படியே தண்டிக்க முடியும்.
மோட்டார் சைக்கிளால் மோதியவரை சுட்டுக்கொல்லும் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு யார் வழங்கியது?
ஏற்கனவே, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்துள்ள நிலையில் பொலிஸ் அதிகாரத்தை படைத் தரப்பு கையில் எடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேவேளை, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலிருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்ற எமது மக்களின் கோரிக்கை நியாயமானதே என்பதை இச்சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.