வருகிறாராம் சுரேன் இராகவன்?
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலக திறப்பின் போதும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
30 வருடகால போருக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ரீதியிலான தாக்கம் இன்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்த கேள்வியை எழுப்பும்போது அந்த கட்சியில் உள்ளவர்களே திருப்தியடைய முடியாத அளவுக்குதான் நிலைமை உள்ளது.
ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தெளிவான வெற்றியைபெற்று, பலமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, முட்டிமோதும் அரசியலை கைவிடுத்து போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக்கட்சியுடன் இருக்கின்றேன்.
ஓகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் என சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.