November 22, 2024

வெற்றிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்? கசிந்த ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு உதவும் படி சீன அதிபரிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்தே டிரம்ப், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

ஆனால் யார் என்ன சொன்னாலும், நான் செய்வது தான் சரி என்பது போல் டிரம்பும் செய்து வருகிறார்.

வெளியுறவுக் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா விவகாரம் எனப் பல விஷயங்களில் டிரம்பின் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

டிரம்ப்பின் ஆட்சி காலம் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது, வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் டிரம்ப் நிற்கிறார்.

கொரோனாவிற்கு முன்பு கூட டிரம்பிற்கு ஓரளவு மக்களிடம் செல்வாக்கு, இருந்தது, தற்போது கொரோனாவால் அவர் எடுத்த சில முடிவுகள் அமெரிக்க மக்கள் பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நடைபெறவிருக்கும் தேர்தலில் டிரம்ப் தோல்வியடையலாம் என்று கூட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் டிரம்பின் ரகசிய விவாதங்கள், சர்ச்சையான நடவடிக்கைகள் ஆகியன குறித்து The Room Where It Happened: A White House Memoir என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஜான் போல்டனின் புத்தகத்தை வெளியிட அமெரிக்க அரசாங்கம் அனுமதி தர தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், இந்தப் புத்தகத்தை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


முன்னதாக, இந்தப் புத்தகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியுள்ளது.

அதில், ஜப்பானில் உள்ள ஒசாகாவில் கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் நடந்தது.

அப்போது டிரம்ப், அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற தனக்கு உதவ வேண்டும் என ஜின்பிங்கிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜான் போல்டன், டிரம்ப் கூறிய சரியான வார்த்தைகளை என்னால் குறிப்பிட முடியவில்லை.

ஏனெனில், அரசாங்கம் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு புத்தகத்தை ஆய்வு செய்ததில் அந்த வார்த்தைகளை வெளியிடத் தடை விதித்தது என்று கூறியுள்ளார்.

டிரம்ப் தனது ஆட்சியில் சொந்த அரசியல் நலன்களுக்காக வெளியுறவுக் கொள்கைகளை மேற்கொண்டதாகவும் ஜான் போல்டன் பதவியில் இருந்தபோது, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கணக்கீடுகள் இல்லாமல் டிரம்ப் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜான் போல்டனின் புத்தகம் வெளியானால் டிரம்பின் ஆட்சி பற்றிய அதிக ரகசியங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

இதனால், வரும் தேர்தலில் அவருக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும். எனவே, இந்தப் புத்தக வெளியீட்டை நிறுத்த டிரம்ப்பின் நிர்வாகம் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.