Mai 17, 2024

தொடர்பு அலுவலகம் தகர்ப்பு! இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்!

வடகொரியா தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்றது. நேற்று வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிமருத்து வைத்து வெடிக்க வைத்து தரைமட்டமாக்கியது.

வட கொரியுடனான பதற்றங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் தனது பதவி விலகலை முன்வைத்துள்ளார். கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைவதற்கு பொறுப்பேற்றதாக கூறியே கிம் யியோன்-சுல் பதவி விலகியுள்ளார்.
வட கொரிய இராணுவம் எல்லையில் உள்ள ஆயுதமற்ற பகுதிகளுக்கு படையினரை அனுப்பப்போவதாக கூறியுள்ளது.
அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தென் கொரியா இராணுவ டாங்கிகளை எல்லையில் குவித்துள்ளது.
சமீப நாட்களாக வடகொரியா தென் கொரியாவை கடுமையாக மிரட்டி வந்ததுடன், இரு நாட்டுக்கும் பொதுவாக 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை தகர்க்க இருப்பதாகவும் மிரட்டியது.மேலும், தென் கொரியாவுடன்  இனி எந்த உறவும் இல்லை எனவும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் எனவும் கிம் ஜாங் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
தென் கொரியா எல்லை மீறிச் செல்வதாகவும், தங்கள் இராணுவத்திடம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அளித்துள்ளதாகவும் கிம் ஜாங் சகோதரி இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே எல்லையில் அமைந்துள்ள அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. இதை வடகொரிய அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது.குறித்த சம்பவத்திற்கு பின்னரே தென் கொரியா தங்கள் எல்லையில் இராணுவ டாங்கிகளை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.