கொரோனாவை குணப்படுத்தும் முதல் மருந்து! ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அறிவிப்பு ;
உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிலிருந்து, டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து நோயாளிகளைக் குணப்படுத்துகிறது என்று ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகள் திணறி வந்தன. ஆயுர்வேதா, சித்தா தொடர்ந்து ஆங்கில மருத்துவம் வரை அனைத்து மருத்துவத் துறைகளிலும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக்கப்பட்டது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில் கொரோனா வைரசிலிருந்து உயிரைக் காக்கும் மருந்தை இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாகவும் மலிவு விலையிலும் இம்மருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவு ஸ்டீராய்டு சிகிச்சை மருந்தான டெக்ஸாமெதாசோன், கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப் பெரிய ஆயுதமாக இருக்கும். கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புகளை மூன்றில் ஒரு பங்கு வரை டெக்ஸாமெதாசோன் மருந்து குறைக்கிறது. ஏற்கனவே மற்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள், கொரோனா வைரசையும் குணப்படுத்தப் பயன்படுமா என்று ஆய்வாளர்கள் சோதனை மேற்கொள்ளும் மருந்துகளில் டெக்ஸாமெதாசோன் முக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருந்தால், 5,000 உயிர்கள் வரை காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகளைக் கொண்ட ஏழை நாடுகளில் இம்மருந்து பெரும் நன்மை பயக்கும்.
இது, நல்ல பலனை தரும் நிலையில், 2,00,000 டெக்ஸாமெதாசோன் மருந்துகளைச் சேர்த்து வைத்துள்ளதோடு, வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு இம்மருந்து எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளில் 20 பேரில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் குணமடைகிறார்கள். அப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் சிலருக்குத்தான் செயற்கை சுவாசம் மற்றும் வென்டிலேசன் உதவி தேவைப்படுகிறது. இதுபோன்று அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு இம்மருந்து உதவியாக இருக்கும்.
கொரோனா அல்லாமல் பிற நோய்களால் பாதிக்கப்படும் போது, நோயாளிகளுக்கு வீக்கத்தைக் குறைக்க இம்மருந்து உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா வைரசை எதிர்த்து உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் போராடும் போது, ஏற்படும் பாதிப்புகளை நிறுத்துவதற்கு இம்மருந்து பயன்படும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 2,000 நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து வழங்கியும். 4,000 க்கும் நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்காமலும் சோதனை மேற்கொண்டது.
வென்டிலேட்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொடுத்ததில், அவர்களில் இறப்பு விகிதம் 40 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்களுக்கு இம்மருந்து செலுத்தியதில் இறப்பு விகிதம் 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக குறைந்துள்ளது.
”இதுவரை சோதனை செய்யப்பட்ட மருந்துகளில், டெக்ஸாமெதாசோன் தான் இறப்பு விகிதத்தைக் குறைத்தது என்றும், இது முக்கியமான கண்டுபிடிப்பு என்றும் மூத்த ஆய்வாளரும், பேராசிரியருமான பீட்டர் ஹார்பி தெரிவித்துள்ளார்.
முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறுகையில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் ஒவ்வொரு 8 நோயாளிகளில் ஒருவரது உயிர் இம்மருந்தின் மூலம் காப்பாற்றப்படுகிறது என்றும், ஆக்சிஜன் தேவைப்படும் ஒவ்வொரு 20 முதல் 25 நோயாளிகளில் ஒருவரது உயிர் காப்பாற்றப்படுகிறது என்றும் இம்மருந்து உண்மையான பலனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஒரு நோயாளிக்கு இம்மருந்தைக் கொண்டு 10 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற 35 பவுண்ட்கள் செலவாகிறது. இந்திய மதிப்பில், ரூ.3,355 ஆகும். இது உலகம் முழுவதும் கிடைக்கக்கூடியது. இம்மருந்தினை தாமதமின்றி மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு வழங்கலாம். ஆனால் மக்கள் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி வாங்கிச் செல்லக் கூடாது என்றும் மார்ட்டின் லாண்ட்ரே தெரிவித்துள்ளார்.
செயற்கை சுவாசம் மற்றும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படாமல், லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு இந்த மருந்து வேலை செய்யாது. மார்ச் மாதம் முதல் மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கான சோதனை தொடங்கப்பட்டது. மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் இது இறப்பு மற்றும் இதய பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதால் சோதனை முயற்சியிலிருந்து இம்மருந்து கைவிடப்பட்டது. மேலும், கொரோனா சிகிச்சை காலத்தைக் குறைக்கும் ரெமெடிசிவிர் என்ற மருந்தும் எளிதில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
டெக்ஸாமெதாசோன், மருந்து 1960 முதல் மூட்டுவலி மற்று ஆஸ்துமா நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா