மீண்டும் ஊடக அடக்குமுறை?
கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற சிஐடியினர் தான் பயன்படுத்திய மடிக்கணிணியை கைப்பற்றியுள்ளனர் என தற்போது வெளிநாடொன்றில் உள்ள சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்டியன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஆள்கடத்தல் தொடர்பான விசாரணைக்களுடன் எனது பெயரை தொடர்புபடுத்தி பல மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்துள்ளன.
இந்த விசாரணை தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எனது சகாக்களையும் என்னுடன் முன்னர் பணிபுரிந்தவர்களையும் விசாரணை செய்துள்ளனர்.
குறிப்பாக எனது இலத்திரனியல் சாதனங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 29ம் திகதியும்,ஜூன் நான்காம் திகதியும் சிஐடி அதிகாரிகள் எனது வீட்டிற்கு சென்று நீதிமன்ற அனுமதியின்றி எனது மடிக்கணிணியை எடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
எனது குடும்பத்தினர் சட்ட உதவியை பெற்றுக்கொண்டதுடன் நீதிமன்ற உத்தரவின்றி அதனை வழங்கமுடியாது என சிஐடியினருக்கு அறிவித்துள்ளனர்.
ஜூன் 9 ம் திகதி ஐந்து சிஐடியினர் எனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.
எனது படுக்கை அறை, எனது மேஜை நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.படங்களை எடுத்துள்ளனர்.
எனது கணிணியை கண்டுபிடித்த அவர்கள் அதனை கைப்பற்றியுள்ளனர்,எனது மடிக்கணிணியை எடுத்தமைக்கான ஆவணத்தினை வழங்கியுள்ளனர்.
எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட விசாரணை தொடர்பில் முன்னர் சிஐடியினர் நீதிமன்ற அனுமதியின்றி எனது தொலைபேசி உரையாடல்கள் குறித்த பதிவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.அதனை ஆராய்ந்த அவர்கள் பின்னர் விபரங்களை வெளிப்படுத்தினர்.